Oxygen : தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசு உத்தரவு

ஆக்சிஜன்

தமிழகத்தின் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 33 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால், ஆக்சிஜன் தேவை 650 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 டன் ஆக்சிஜன் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கோரிக்கை மனு அளித்தார்.

    மேலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அங்கிருக்கும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்க கோரினார். இதனை பரிசீலித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழக அதிகாரிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பியூஷ் கோயல், டி.ஆர் பாலுவிடம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அரசு சார்பில் இணைச் செயலா் ஹூகும் சிங் மீனா, டாக்டர் சஞ்சனா சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.

    இதற்கிடையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று ஒரே நாளில் 16 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மருத்துவ தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலையில் இருந்து நேற்று காலை 7 புள்ளி 74 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தூத்துக்குடியை சேர்ந்த ஆக்ஸிஜன் நிறுவனம் மற்றும் அரசன் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் இரவில் 9 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மதுரை கல்யாண் கேஸ் ஏஜென்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இனி உற்பத்தி செய்யக் கூடிய ஆக்ஸிஜன் தேவைப்படக் கூடிய மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 29 புள்ளி 24 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்சிஜன், கோவை மதுக்கரை ரயில் நிலையம் வந்தடைந்தது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டைபோக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், கடந்த 14-ம் தேதி மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.

    Must Read : தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

     

    தற்போது, ஏழாவது தவணையாக ஒடிசா மாநிலத்தில் இருந்து 29 புள்ளி 24 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்சிஜன், கோவை மதுக்கரை ரயில் நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, கணபதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Published by:Suresh V
    First published: