அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா பரவலை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என  மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா பரவலை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

  நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

  இதனிடையே, ஆக்சிஜன் தட்டுப்பாட்டு தொடர்பாக பல்வேறு மாநில  உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

  இந்நிலையில், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பற்றாக்குறை தொடர்பாக, உச்ச நீதிமன்ற  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது தடுப்பூசிக்கு ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விலையை அறிவித்துள்ளது ஏன்? என மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  மருந்து கட்டுப்பாட்டு சட்டப் பிரிவு 6ன் படி, விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், தேசிய பேரிடர் காலத்தில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் எப்போது செயல்படுத்தப் போகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா பரவலை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மத்திய அரசிடம் கண்டிப்புக் காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதை  உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை என்றும், பிராந்திய வரம்புகள் காரணமாக வழக்கில் சிக்கல்களைக் கையாள்வதில் உயர் நீதிமன்றங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், உச்ச நீதிமன்றம் உதவி செய்யும் என தெரிவித்தனர்.

  வழக்கு விசாரணையின்போது, ஆக்சிஜன் வழங்கல், மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை, மாநிலங்களின் தேவை குறித்து பின்பற்றப்பட்ட வழிமுறை, படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை மேம்படுத்துதல், அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் வெள்ளியன்று ஒத்தி வைத்தது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: