ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்த தடைவிதித்த கனடா

ஆஸ்ட்ராஜெனகா

ரத்தம் உறைதல் புகார்களை தொடர்ந்து, ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு கனடா நாட்டில் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலக அளவில் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும். இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. எனினும், தடுப்பூசி பாதுகாப்பானது என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை தொடர்ந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கின.

  இந்தநிலையில் கனடா சுகாதாரத்துறை, ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயது உட்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்கு திடீரென தற்காலிகமாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியால் ரத்த உறைதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, கனடாவின் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, தடுப்பூசிக்கு தடை விதிக்க பரிந்துரைத்தது.

  இதனைதொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள கனடா சுகாதாரத்துறை, ஐரோப்பாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு, ரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் என்று தேசிய ஆலோசனைக் குழுவினர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தடுப்பூசிக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

  எனினும், கனடாவில் யாருக்கும் ரத்த உறைதல் பிரச்னை தற்போதுவரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்த சீரம் நிறுவனத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கனடா நாட்டு மக்கள் சூழலுக்கு ஏற்றபடியும், வயது மற்றும் பாலின அடிப்படையில் ஆய்வு நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க... சென்னையில் தங்க நகை பட்டறையில் 22 பேருக்கு கொரோனா...!

  கடந்த வாரம் டென்மார்க் அரசாங்கம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கான தடையை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்தது. இதுதவிர 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: