கொரோனா 2ம் அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு; கடந்த 2 மாதங்களில் 38 கர்ப்பிணிகள் மரணம்!

கொரோனா 2ம் அலை பாதிப்பில் சிக்கும் கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் கொரோனா ஏற்பட்டால், பதற்றம் அடையாமல் மன தைரியத்துடன் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியமாக பெற முடியும் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் ஏராளமான கர்ப்பிணிகள், நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் என்ன? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், முதல் அலை பாதிப்பின் போது கர்ப்பிணிகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலை பாதிப்பில், கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்றில் ஒரு கர்ப்பிணி கொரோனா தொற்றுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காலகட்டமாக கருதப்படும் கடந்த இரண்டு மாதங்களில் 38 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். மகப்பேறின் போது ஏற்பட்ட மரணத்தையும் சேர்த்து 64 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும், 8 கர்ப்பிணிகள் மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர் சாந்தி கூறும்போது, கர்ப்பிணிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க முடியாததால், அவர்களது நுரையீரலில் ஏற்படக்கூடிய பாதிப்பை அறிய முடியவில்லை. எனினும், பிரசவ காலத்தில் நோய் தொற்று ஏற்பட்டு பல கர்ப்பிணிகள் குணமடைந்துள்ளதாகவும், கர்ப்ப காலத்தில் கொரோனா ஏற்பட்டால், பதற்றம் அடையாமல் மன தைரியத்துடன் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியமாக பெற முடியும் என்று அவர் கூறினார்.

    25 வயதுக்கு உட்பட்ட பெண்கள், குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில மாதங்களுக்கு தள்ளிவைப்பது நல்லது என்றும், கர்ப்பிணிகள் மாதம் தோறும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பிரசவ காலத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பத்திரிகையாளர் அமலா ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

    கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இதுவரை அனுமதி அளிக்கப்படாததால், முன்னெச்சரிக்கை வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதே, மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: