சீனாவில் கொரோனா... சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் வியாபாரம் பாதிப்பு

சீனாவில் கொரோனா... சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் வியாபாரம் பாதிப்பு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் ரிச்சி ஸ்ட்ரீட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் காய்ச்சலால் சீனா உட்பட பல்வேறு நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்கள் செல்போன் உதிரிபாகங்கள் கணினி லேப்டாப் உள்ளிட்ட அனைத்து வகை உதிரி பாகங்களும் தற்பொழுது தடைப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பாதிப்பை சீன அடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சீனாவால் எந்த நாட்டுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. குறிப்பாக மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கக்கூடிய இந்தியாவிற்கும் இதே நிலைமைதான்.


ஆனால் இது சீனாவிற்கு பாதிப்பு என்பதைவிட இந்தியாவில் இருக்கக்கூடிய சிறு சிறு வியாபாரிகள் முதற்கொண்டு பெரும் வியாபாரிகள் வரை இந்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருக்கக்கூடிய ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் செல்போன் ரிப்பேர் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி சிறு வியாபாரிகள் இங்கு மொத்தமாக வாங்கி கொண்டு சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சீனாவிலிருந்து எந்த உதிரி பாகங்களும் இறக்குமதி செய்யப்படாத காரணத்தினால் பெரும்பாலான கடைகளில் வியாபாரம் இல்லாமல் மந்த நிலை நீடித்து வருகிறது.இதுகுறித்து ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரிகளிடம் கேட்டபோது 90 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து தான் வருகிறது அந்த பொருட்களை வைத்து தான் நாங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புதிய செல்போன்கள் விற்பனை இதுபோன்ற பணிகளை செய்து வருகிறோம். ஆனால் தற்போது இருக்கக்கூடிய இருப்பை வைத்து தான் வியாபாரம் நடக்கிறது இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

கடந்த மாதம் முதல் பொருள்கள் வராமல் தாமதமாகின்றன. மொத்த வியாபாரிகள் இருக்கின்ற பொருட்களை கேட்கக்கூடிய வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். அதேபோல தேவை அதிகரித்துவிட்டதால் விலையும் அதிகமாக விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீனாவின் உற்பத்தி தொழிற்சாலைகளை அணுகியபோது வருகின்ற 21-ம் தேதி முதல் மீண்டும் பொருட்களை உருவாக்கும் பணி தொடரும் என்றும் விரைவில் இந்த நிலை மாறும் என்று தெரிவித்ததாக கூறுகிறார்.

சீனாவை தவிர்த்து இந்தியாவிலும் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை உற்பத்தி செய்தால் இது போன்ற பிரச்சினைகளை வியாபாரிகள் சந்திக்க நேரிடாது. ஆனால் அதற்கான வசதிகளை நாம் இன்னும் துவங்கவில்லை.

மேலும் கணினியினுடைய உதிரி பாகங்கள் சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது. செல்போன் போன்ற உதிரிபாகம் கூட மற்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படலாம். ஆனால் சரியான விலைக்கு சீனாவில் மட்டுமே நம்மால் வாங்க கூடிய சூழல் இருப்பதால் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்று வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்