கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் கட்டமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அதன் பிறகு அரசால் பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்கு இடையே மட்டும் அரசு பேருந்து இயக்கப்பட்டன. இதில் தமிழக கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே எட்டு மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பயணிகளின் நலன் கருதி இரு மாநிலங்களுக்கு இடையே அரசு போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் துவங்கியது.
இதில் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் என இரு மாநிலங்களுக்கு இடையேயும் அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜு ஜு வாடி பகுதி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். இதனால் மூட்டை முடிச்சுகள் குழந்தைகளுடன் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
ஆனால் நேற்று இரவு முதல் இரு மாநிலங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மற்ற மாவட்டத்திலிருந்து வரும் பயணிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர். தற்போது தற்காலிகமாக தீபாவளி பண்டிகைக்காக 16ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.