Net in Bihar Ganga | மிதந்து வரும் உடல்களை மீட்க கங்கையில் மிகப்பெரிய வலைவிரிப்பு- வலையில் சிக்கிய உடல்கள்

கங்கைக் கரையில் பாதுகாப்பு.

உத்தரப் பிரதேசத்திலிருந்து கங்கையில் விடப்பட்ட உடல்கள் பீகாரின் பக்சார் மாவட்டத்தின் சவுசா என்ற கிராமத்தில் உள்ள கங்கையில் மிதந்து வந்ததையடுத்து 71 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து பீகார் மாநில மாவட்ட நிர்வாகம் மிதந்து வரும் உடல்களைத் தடுக்க, கங்கையில் மிகப்பெரிய வலையை விரித்துள்ளனர்.

  • Share this:
    கங்கையில் மிதக்கும் உடல்கள் பற்றிய தகவல்கள் அதிச்சியளித்துள்ளதால் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள உயர்நீதிமன்றம் இன்றுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய பீகார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக பீகார் அரசின் உயரதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறும்போது, “பீகார்-உ.பி. எல்லையில் உள்ள ராணிகட்டில் நதியில் பெரிய வலையை வீசி மிதந்து வரும் உடல்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். உ.பி.யிலிருந்து மிதந்து வரும் உடல்கள் சில அந்த வலையில் சிக்கியிருக்கின்றன. எனவே இனி உத்தரப் பிரதேச மாநிலம்தான் அந்த உடல்களை மீட்டு கொண்டு செல்ல வேண்டும். உ.பி. நிர்வாகத்திடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளோம்.

    எனவே இது தொடர்பாக என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அது உத்தரப் பிரதேச அரசின் கையில்தான் உள்ளது. உ.பி.-பீகார் எல்லை மாவட்ட நிர்வாகத்தினருடன் நாங்கள் சீரான முறையில் தொடர்பிலிருக்கிறோம். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இனி நதியில் உடல்களை வீசி எறிய முடியாது” என்றார்.

    முன்னதாக பீகார் அமைச்சர் சஞ்சய் ஜா தனது ட்விட்டரில், “மீட்கப்பட்ட 71 உடல்களின் இறுதிச் சடங்கு வழக்கமான முறையில் நடத்தப்பட்டன. ரானிகட் கங்கையில் வலை விரிக்கப்படுள்ளது. உ.பி. அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். கங்கைக்கும், இறந்தவர்களுக்கும் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளோம்” என்றார்.

    பக்சார் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிதேந்திர நாத், கூறும்போது, கங்கை நதி நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கிராமமக்களிடம் அறிவுறுத்தியுள்ளோம், ஏனெனில் கொரோனா மரணம் எனில் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    சவுசா கிராமம் உள்ளிட்ட எல்லை கிராமங்களிலிருந்து மிதந்து வந்த உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் எனவே தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவ அறிக்கை வெளி வரும் வரை அவை கோவிட் இறப்புகள் என்று கூற முடியாது. எனினும் எச்சரிக்கை தேவை. மதச் சம்பிரதாயத்துக்காகவோ குளிப்பதற்காகவோ கங்கை நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: