வாழ்நாள் சேமிப்பு ரூ. 2 லட்சத்தை மக்களுக்காக வழங்கிய மாற்றுத்திறனாளி!

ஜனார்தனன்

மாற்றுத்திறனாளியாக இருந்து பீடித் தொழில் செய்து, சேமித்த பணத்தை மக்களுக்காக நன்கொடையாக வழங்கிய அவரை கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக, வாழ்நாள் முழுவதும் சேமித்த 2 லட்சம் ரூபாயை கேரளா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து, அனைவரையும் நெகிழவைத்துள்ளார் ஜனார்த்தனன் என்ற மாற்றுத்திறனாளி நபர்.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை அவரவர் மாநிங்களுக்கு செய்து வருகின்றனர். அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்களுக்குள் ஒன்றாக இருக்கும் கேராளவுக்கும், அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள், கேரள மக்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். ஆனால், மாற்றுத் திறனாளி ஒருவர் தன் வாழ்நாள் சேமிப்பை, கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியது, அம்மாநில மக்களின் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்தனன், பீடித் தொழிலாளியான அவருக்கு இரு செவிகளும் கேட்கும் திறன் இல்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில், தற்போது தனியாக வசித்து வருகிறார். மனைவி இறப்புக்கு பிறகு உடல்நிலை பிரச்சனையாக சிகிச்சை எடுத்துவந்த ஜனார்த்தனன், மன நிலை பிரச்சனைகளையும் சந்தித்து வந்துள்ளார். அதற்காகவும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மனநிலைப் பிரச்சனைக்கு மாத்திரை எடுக்கும்போது, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தடுப்பூசி குறித்து தொலைக்காட்சியில் பேசியதை கேட்டிருக்கிறார் ஜனார்த்தனன்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதியடைந்து வருவதையும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வருவதையும் கேட்டு மனம் வெதும்பியுள்ளார். மேலும், தடுப்பூசிகளை அரசு இலவசமாக வழங்குவதை தெரிந்து கொண்டாலும், தன்னால் இயன்ற உதவியை மாநில அரசுக்கு செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். அதன்படி, அடுத்த நாள் காலையில் எழுந்த அவர், தனது வங்கிக் கணக்கு இருக்கும் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு சேமித்து வைத்திருந்த தொகையை வங்கி மேலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஜனார்த்தனன், அந்த தொகையில் 850 ரூபாய் மட்டும் வங்கியில் வைத்துக்கொண்டு எஞ்சிய 2 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுமாறு தெரிவித்துள்ளார்.

அவரின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், ஒரு லட்சம் ரூபாயை மட்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதாவது, வாழ்நாள் சேமிப்பு, பீடி நிறுவனத்தில் வேலை செய்தபோது கிடைத்த பி.எப் வருவாய், இறந்த மனைவி ஓய்வுபெற்றபோது கிடைத்த பணம், கேரள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாத பென்ஷன் என எல்லா தொகையும் சேர்த்து 2,00,850 ரூபாய் இருந்துள்ளது.

Also read... Kerala | கேரளாவில் நீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!

ஆனால், தனக்கு மன நலப்பிரச்சனை இருப்பதாகவும், இந்த உதவியை செய்யாவிட்டால் தன்னால் நிம்மதியாக தூங்க முடியாது எனக் கூறிய ஜனார்த்தனன், ஏற்கனவேகூறியதுபோல் 2 லட்சம் ரூபாயையும் கேரள மாநில முதலைமச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு விடாப்பிடியாக தெரிவித்துள்ளார். கடைசியாக, வங்கி மேலாளரும் ஜனார்த்தனனின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்துக்கு அவருடைய நிவாரண தொகையை அனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளியான ஜனார்த்தனன் குறித்து வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்ததும், கேரளா முழுவதும் ஒரே நாளில் பிரபலமானார் ஜனார்த்தனன்

தன்னுடைய உதவி குறித்து பேசிய ஜனார்த்தனன், "கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், தடுப்பூசி குறித்தும் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதைக் கேட்டு அன்றிரவு தூங்கவில்லை. தன்னால் என்ன செய்ய முடியும் என்ற இரவு முழுவதும் யோசித்தேன். 2 மணி நேரம் மட்டுமே தூங்கிய நிலையில் காலையில் எழுந்தவுடன் வங்கி கணக்கு இருக்கும் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சென்று என்னுடைய நிலைப்பாட்டைக் கூறினேன். ஆனால், வங்கி அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும், 2 லட்சம் ரூபாயை கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துவிட்டேன். இப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறினார். ஜனார்த்தனனின் வங்கிக் கணக்கில் தற்போது 850 ரூபாய் மட்டுமே உள்ளது. மாற்றுத்திறனாளியாக இருந்து பீடித் தொழில் செய்து, சேமித்த பணத்தை மக்களுக்காக நன்கொடையாக வழங்கிய அவரை கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: