ஆஸ்துமா நோயாளிகளை கொரோனா வைரஸ் பாதிப்பது குறைவு - ஆய்வில் தகவல்

ஆஸ்துமா நோயாளிகளை கொரோனா வைரஸ் பாதிப்பது குறைவு - ஆய்வில் தகவல்

மாதிரி படம்

ஆஸ்துமா நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட 30 சதவீதத்துக்கும் குறைவாகவே வாய்ப்புள்ளது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ள நிலையில், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை இந்நோய் எளிதில் தாக்கும் என அச்சம் நிலவி வந்தது. இதுதொடர்பாக இஸ்ரேலின் டெல் - அவிவ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

  அதன்படி, 37 ஆயிரத்து 469 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், இரண்டாயிரத்து 266 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 153 பேருக்கு ஆஸ்துமா இருந்ததும், எனினும் ஆஸ்துமா நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

  இதேபோல், அமெரிக்காவின் போஸ்டன் மருத்துவ பல்கலைக்கழக நிபுணர்கள் கடந்த அக்டோபர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆஸ்துமா நோயாளிகள் 562 பேர் மற்றும் ஆஸ்துமா இல்லாத இரண்டாயிரத்து 686 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மருத்துவ வசதிகளே தேவைப்பட்டதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைகள் ஏதும் தேவைப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆஸ்துமா நோயாளிகள் உயிரிழப்பது மிகவும் குறைவு என்றும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தீவிர ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 44 பேரும் உயிரிழக்கவில்லை என்றும் போஸ்டன் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்துமா நோயாளிகள் உடல் நலனில் கூடுதல் விழிப்புடன் இருப்பார்கள் என்றும் அவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலர்கள் மற்றும் மருந்துகள், கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

  எனினும், ஆஸ்துமா நோயாளிகள் தொற்று நோய் காலங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை, நிச்சயம் உட்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: