குட்டித் தமிழ்நாடு எனும் 'மும்பை தாராவி' - அதிவேகமாக பரவும் கொரோனா: என்ன சொல்கிறார்கள் தாராவி தமிழர்கள்...?

தாராவி பொதுக்கழிப்பிடப் பகுதி

”95 சதவிகிதம் பேரு தினமும் வேலைக்கு போய் அதுல கிடைக்குற கூலியில வாழுறவங்க. அவங்களுக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணாம, சமூக விலகல பத்தி மட்டும் பேசுறது பொருத்தமா இருக்காது” என்கிறார் வளர்மதி

 • Share this:
  ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, பெருமளவு தமிழர்கள் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 4 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

  மும்பையின் மையப்பகுதியான தாராவி பல சிறு தொழில்களுக்கும், அன்றாட வேலைகளான பல கூலித்தொழில் செய்பவர்களுக்குமான புகலிடம். மிகக்சிறு வீடுகள் நெருக்கமாக அமைந்த தாராவியில் சமூக விலகல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அங்கிருக்கும் சுகாதார நிலையைக் குறித்தும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தாராவி மக்களிடமே தொடர்புகொண்டது நியூஸ் 18 தமிழ்நாடு.

  தாராவியில் ’மகிழ்ச்சி’ என்னும் மகளிர் உதவிக்குழுவில் உறுப்பினராகவும், சிறு தொழில் செய்பவருமான வளர்மதி பேசுகையில், ”நாங்க எல்லாருமே பத்துக்கு பத்து வீட்டுக்குள்ள வாழுறவங்க. இதுக்குள்ள எந்த வாஷ் பேசினும் இருக்காது. இங்க 95 சதவிகிதம் பேரு தினமும் வேலைக்கு போய் அதுல கிடைக்குற கூலியில வாழுறவங்க. அவங்களுக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணாம, சமூக விலகல பத்தி மட்டும் பேசுறது பொருத்தமா இருக்காது. தாராவியில எல்லாருக்குமே பொது கழிப்பறைதான். ஒரு நாளைக்கு 500-இல் இருந்து 600 பேர் வரைக்கும் ஒரே டாய்லட்டதான் பயன்படுத்துறோம். என்ன ஆகும்னு தெரியலயே..

  அரசுதான் தற்காலிக டாய்லெட்டுகளையோ, மற்ற சுகாதார வேலைகளையோ கவனிக்க நிறைய வேலை செய்யணும். நாங்க கொத்து கொத்தா உயிர் பலி கொடுப்போமோன்னு பயமா இருக்கு” என  விசும்பலுடன் பேசுகிறார்.

  தாராவி பொதுக்கழிப்பிடப் பகுதி


  தாராவியின் நெருக்கமான தெருக்களும், வீடுகளும்


  500 பேர் முதல் 600 பேர் வரை பயன்படுத்தும் கழிப்பிடத்தின் நிலை


  தாராவி சால் பகுதி


  தெர்மல் ஸ்கேனர்களைக் கொண்டு வீடு வீடாக காய்ச்சல் சோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அதைக் குறித்து கேட்டபோது, “Infrared gun-ஐ நெற்றியில் வைத்து காய்ச்சலை அளவிடுகிறார்கள். சில நேரங்களில் இதில் துல்லியமான டெம்பரேச்சரை காண்பிப்பதில்லை. அதனால் காய்ச்சலை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொண்டு அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. வெப்பத்தை அளக்கும் கருவியின் முனைக்கும், நெற்றித் தோலுக்கும் 3 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். இல்லையேல் முடிவுகள் மாறி வரும். ஆக அதை கண்காணிக்க மராட்டிய அரசு குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

  சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் கூட, தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. நெருக்கமான பகுதி என்பதால் இங்கும் மற்ற பகுதிகளின் அதே வழிமுறை சரிவருவதில்லை. ரேஷன் பொருட்களுக்கும், சாதாரண உணவுக்கும் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அன்றாட கூலிகள்தான் இங்கு அதிகம். அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீதர்.

  தாராவி தொகுதி எம்.எல்.ஏ-வான வர்ஷா கெய்க்வாட், “இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒத்துழைப்போம். மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் உதவி செய்கிறார்கள். ஊரடங்குக்கு ஒத்துழைத்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

  மிகக் குறைவானபொதுக் கழிப்பிடங்களும், பத்துக்கு பத்து அடி வீடுகளையும் கொண்ட தாராவிக்கு, மும்பையின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மும்மடங்கு கவனம் தரப்படவேண்டும். இல்லையெனில் அங்கு சமூகத் தொற்றாக மாறுவதையும் பெருமளவு உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த  முடியாது என்பதே தாராவி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  https://tamil.news18.com/news/national/six-taj-hotel-employees-test-positive-for-coronavirus-in-mumbai-colleagues-quarantined-skd-277475.html

   
  Published by:Gunavathy
  First published: