கொரோனா உருமாற்றத்தால் மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவைவரும் - எய்ம்ஸ் மருத்துவ இயக்குநர்

மாதிரிப் படம்

உருமாறும் கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டு தவணைகளாக இந்தத் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. கொரோனா உருமாறி வருவதால், அதற்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா, வரும் காலத்தில் பல்வேறு வகையிலும் கொரோனா உருமாற்றம் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

  அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். எனவே, புதுவகை வைரஸ்களை எதிர்கொள்ள 3-வது தவணை தடுப்பூசி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதற்காக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் வழங்கும் இரண்டாம் தலைமுறை தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று கூறினார்.

  இதுதொடர்பான சோதனை நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டபிறகு, கூடுதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.

  குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  இதேபோல, குழந்தைகளுக்கு போடும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு சைடஸ் காடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வரும் வாரங்களில் அல்லது செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராக இருக்கும் என்றும், பள்ளிகளில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: