CoronaVirus : அமெரிக்கர்கள் இந்தியாவை விட்டு விரைவாக வெளியேற அறிவுறுத்தல்

CoronaVirus : அமெரிக்கர்கள் இந்தியாவை விட்டு விரைவாக வெளியேற அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ்

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு கருதி தங்கள் நாட்டு குடிமக்கள் இங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  • Share this:
    கொரோனாபரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்கர்கள் விரைவாக இந்தியாவை வெளியேறுவதுதான் பாதுகாப்பானது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தட்டுப்பாடு உள்பட மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடையை மே 14ம் தேதி வரை நீட்டித்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு, கடந்த 24ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையில், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த தடையை மே 14ம் தேதி வரை நீட்டிப்பதாக அமீரக விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் அறிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கு முன்பதிவு செய்துள்ள தேதிகளை, மாற்றியமைத்துக் கொள்ளுமாறு எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையம் செயல்படும் நேரம், குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனர்கள் 15 பேருக்கு தொற்று உறுதியானதால், முழு நேர விமான சேவைகள் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் மே 14ம் தேதி வரை. காலை நேர விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான சேவைகள் இடம்பெறும் என்றும். அதற்கு ஏற்றார்போல் விமானங்களுக்கான நேரம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால், ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகள் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன.

    நாடு முழுவதும் ஒரே நாளில், புதிதாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அதேநேரம் 2,69,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Must Read : பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

    நாடு முழுவதும் தற்போது சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: