Digestive Issues : கொரோனா காலத்தில் அதிகரிக்கும் செரிமானம் சார்ந்த பிரச்னைகள்! மருத்துவர்கள் தகவல்

உடல் நலம்

கொரோனா ஒரு பக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் அதே நேரத்தில், பக்க நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். கொரோனா ஒரு பக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் அதே நேரத்தில், பக்க நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வீட்டிலேயே முடங்கியிருப்பதால் உடற்பயிற்சி, உணவு முறை, தூங்கும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டு செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர். வாயுத்தொல்லை, உப்புசம், அமிலப் பிரச்சனை, செரிமானத் தொல்லை உள்ளிட்ட நோய்களை பலரும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக இந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ |  கொரோனாவில் இருந்து மீண்டவர்களா நீங்கள்? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் எடுங்க!

ஊரடங்கு காரணமாக உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், டையட் பின்பற்றுபவர்களுக்கு இது தொந்தரவாக மாறியுள்ளது. விடுமுறை என்ற எண்ணத்தில் காலையில் எழும் நேரமும், இரவில் தூங்கும் நேரமும் பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை என தெரிவிக்கும் மருத்துவர்கள், காலையில் உடற்பயிற்சி செய்வதை கட்டாயம் தவிர விடக்கூடாது என கூறியுள்ளனர்.

ஏற்கனவே ஒரு வாழ்க்கை முறைக்கு பழகிய உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்போது, சில உபாதைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறும் ஊட்டசத்து நிபுணர்கள், ஜிம் இல்லை என்பதற்காக உடற்பயிற்சியை முற்றிலுமாக விட்டுவிடக்கூடாது என தெரிவித்துள்ளனர். கடினமான உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும், இயல்பாக செய்யக்கூடிய பயிற்சிகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ALSO READ | தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் பாதிப்பு: குறையும் கொரோனா பாதிப்பு

ஊரடங்கில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பதாக கூறும் நிபுணர்கள், அதுவும் செரிமானப் பிரச்சனைகளுக்கு காரணம் எனக் கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பு, வீட்டில் ஒருவரை இழத்தல் போன்ற மிகப்பெரிய சவால்களை சந்திப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பது, பக்க நோய்களின் பாதிப்பு அதிகரிப்பதற்கும் காரணம் என விளக்கியுள்ளனர்.

வயிற்றுப்போக்கு, வாயுதொல்லை, அடிவயிறு வலி, சோர்வு போன்றவற்றுக்கு மன அழுத்தம் மிக முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், இது குறித்து பரவலான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ALSO READ | எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் தமிழகத்தில் அதிகரிப்பு... காரணம் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்து, மாத்திரைகளும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், ஏற்படும் பாதிப்பை பொறுத்து அவர்கள் மருத்துவமனையில் முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசாதாரண பிரச்சனையை கடந்துபோனால் பின்நாட்களில் மிகப்பெரிய நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கும் வழிவகுத்துவிடும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனா காலத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது மட்டுமே மிகச் சிறந்த விஷயம் என கூறியுள்ளனர். முடிந்தளவுக்கு வரும்முன் காத்து, டையட், தூக்கம் மற்றும் உடற்பயிற்சி, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: