கொரோனாவால் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி!

காட்சிப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த பெண் ஒருவர் இறுதிச்சடங்கின் போது கண் திறந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
மஹாராஷ்டிரா மாநிலம், பார்மதி தாலூகாவை சேர்ந்த முதலே என்ற கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான சகுந்தலா கெய்க்வாட் என்ற பெண்ணுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதித்துள்ளது. வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது தீவிர அறிகுறிகள் தென்பட்டிருக்கிறது. வயது மூப்பு காரணமாக உள்ள பிரச்சனைகளும் அவரை அவதிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதனையடுத்து அவரது குடும்பத்தார் சகுந்தலா தேவியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கே அவருக்குப் படுக்கை வசதி கிடைக்க தாமதமாகியிருக்கிறது. இந்த நேரத்தில் சகுந்தலா ஆம்புலன்ஸிலேயே சுயநினைவை இழந்திருக்கிறார். இதனையடுத்து அவரைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் பணியாளர், அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். பின்னர் அவரது குடும்பத்தினர் தங்கள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லியிருக்கின்றனர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணின் உடலைத் தங்கள் கிராமத்துக்கு எடுத்துச் சென்று, இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை நெருப்பில் இடத் தூக்கியபோது, அந்தப் பெண் தன் கண்ணைத் திறந்து அழத் துவங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க துவங்கியுள்ளனர். ஒருவேளை மருத்துவமனையில் இடம் கிடைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சைகள் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் துயர சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வேளையில் இந்த மாதிரி விசித்திர சம்பவங்கள் மக்களை மேலும் அச்சமுற செய்துள்ளது. கொரோனாவால் இந்தியா நிலைகுலைந்துள்ளது. மேலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் பற்றாக்குறையினால் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. தினசரி கேள்விப்படும் உறவினர்கள், நண்பர்களின் மரணச் செய்திகள் இந்திய மக்களை மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இருப்பினும் கடந்த சில நாட்களாகக் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது ஆறுதல் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு ஊரடங்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனைப் புரிந்துகொண்டு மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது அவர்களை மட்டுமல்ல, அவர்களை சார்ந்தவர்களுக்கும் உதவிகரமானதாக இருக்கும் என்றும், நோய் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனைகள் பெற்று, மருத்துவர்களின் அறிவரையின் பெயரில் சிகிச்சை பெற வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏனெனில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. அதனையும் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: