இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா பரவல்... இந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு...

பொது முடக்கம்(மாதிரிப் படம்)

இந்தியாவில் ஒரே நாளில் 40,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்திருக்கிறார்.

 • Share this:
  கடந்த நவம்பர் 29-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 40,000-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக 40,000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன், ஒரு நாள் தொற்று எண்ணிக்கை விகிதம் சுமார் 11 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

  மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 25,800-ஐ கடந்துள்ளதால், சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மட்டுமின்றி சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், மேற்குவங்க மாநிலங்களிலும் தொற்று பரவல் வேகமடுத்துள்ளதால், நாடு முழுவதும் இரண்டாம் கட்ட அலை பரவத் தொடங்கியதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

  பீகாரில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவப் பணியாளர்கள் ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுப்பு எடுக்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜைனி உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் பேருந்துகள் வந்து செல்லவும் மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், வணிக வளாகங்கள், திரையரங்குகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  அதன்படி, வணிக வளாகங்கள், மதுபான கூடங்கள் உள்ளிட்டவை இரவு 10 மணிக்கு மூடப்படும். இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமோ, பயப்படவோ தேவையில்லை என்றார்.

  மேலும் படிக்க...கொரோனா 2வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

  ஒவ்வொரு தடுப்பூசிக்கும் உலகளவிலான நோய் எதிர்ப்பு திறனை உறுதி செய்யத் தேவையில்லை என்று கூறிய அவர், முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைப்படியே தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், இது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம் இல்லை எனவும் ஹர்ஷவர்த்தன் குறிப்பிட்டார்.

  இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

  பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிடில், மீண்டும் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் நிலை உருவாகும் எனவும் கூறினார். இந்நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரையரங்குகள், கலையரங்கங்கள், தனியார் அலுவலகங்களில் வரும் 31-ம் தேதி வரை, 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: