கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டில் உள்ள மருத்துவர்களும் இறங்கியுள்ளனர். சில நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-BioNTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 பேரின் மரணமும் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள் பேசும்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட 80 வயதுக்கும் அதிகமான அந்த நபர்கள் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபைசர் பயோன்டெக் தடுப்பூசிக்கும் இந்த 23 பேரின் உயிரிழப்புக்கும் நேரடியான தொடர்பு இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், உயிரிழந்த 23 பேரில் 13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் என நார்வே பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ``யாருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதில் மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுவரை 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான ஃபைசர் அல்லது மாடர்னா (Moderna) ஆகியன போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இறந்தவர்களைத் தவிர்த்து பலருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.