HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»2 new types of corona virus in maharashtra and kerala sur

மகாராஷ்டிரா, கேரளாவில் 2 புதிய வகை கொரோனா வைரஸ் - மத்திய அரசு தகவல்

வைரசின் தன்மையில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். பிறழ்வுகளை கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.

மகாராஷ்டிரா, கேரளாவில் 2 புதிய வகை கொரோனா வைரஸ் - மத்திய அரசு தகவல்
கொரோனா வைரஸ்
  • Share this:

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் உருமாறிய இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் அங்கு N440K, E484K ஆகிய இரண்டு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் அந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு, இவ்விரு புதிய வகை கொரோனா வைரஸ்களே காரணம் என நம்புவதற்கில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், “புதிய வகை கொரோனா வைரஸ்களான என்440கே, இ484கே ஆகிய இரண்டும் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோன்று கேரளாவிலும், தெலங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் இருக்கின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின், சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வைரஸ்கள்தான் காரணம் என்று விஞ்ஞானபூர்வமாக நம்புவதற்கு எந்த உரிய ஆதாரம் எதுவும் இல்லை.

தொடர்ந்து வைரஸ் பிறழ்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,500 திரிபுகள் மரபணு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. இப்படி மரபணுக்களை வரிசைபடுத்துகிறபோது, நாங்கள் வைரசின் தன்மையில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். பிறழ்வுகளை கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

கேரளா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பது இருப்பது அரசுக்கு புதிய சாவாலை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

நாட்டில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், மக்களின் பயம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்த புதிய வகை கொரோனாவால் இயல்பு வாழ்க்கையில், ஏதேனும் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

Must Read - குஜராத் மாநகராட்சித் தேர்தல்: மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க - காங்கிரஸ் படுதோல்வி

 

கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதிலும் படிப்படியாக செலுத்தப்பட்டு வருவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Published by:Suresh V
First published: