• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2.12 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்....

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2.12 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்....

தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். சென்னையில் மட்டும் இதுவரை 2,12,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும், எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளலார் நகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற, 1,118 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 659 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் 2,12,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2,000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

    கரூரில் பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

    கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாத பயணிகள், உணவகங்கள், டீக்கடைகளில் முகக்கவசம் அணியாதவர்கள் என 30 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை...

    கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத, 1,824 பேருக்கு சனிக்கிழமை ஒரே நாளில் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத 150 பேருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஞாயிறன்று ஒரே நாளில் 29,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: