"செத்தாலும் ஊரில்தான் சாகவேண்டும்" : மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 1700 தமிழர்கள் கண்ணீர் - மீட்பதில் தாமதம் ஏன்?

பசியை விட ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. செத்தால் கூட பரவாயில்லை அது எங்கள் ஊரில் தான் நிகழ வேண்டும்" என கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர்.

பசியை விட ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. செத்தால் கூட பரவாயில்லை அது எங்கள் ஊரில் தான் நிகழ வேண்டும்" என கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர்.
  • Share this:
தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்ட மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

தினமும் 400 ரூபாய் கூலிக்காக மின் இணைப்பு, கேஸ் இணைப்பு வசதிகளுக்காக பள்ளம் தோண்டும் பணிகளை செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் அங்கு சென்றுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக தற்போது வேலையிழந்து தவித்து வரும் அவர்கள், தற்போது மகாராஷ்டிராவின் பாந்த்ரா,  கொரேகான், ஆரே, விஜயநகர பகுதிகளில் காட்டுக்குள் தார்ப்பாய் வீடுகளில் வசித்து வருகின்றனர்.


புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்காக சிறப்பு ரயில் வசதியை அரசு ஏற்பாடு செய்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில், இந்த மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அந்த மக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள நிலையில், இருந்தும் அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழகம் - மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பிரகாஷ் என்ற தொழிலாளி பேசுகையில், "அரசு அறிவித்த ஆன்லைன் இணையத்திலும் பதிவு செய்து உள்ளோம். மகாராஷ்டிரா காவல்துறையும் எங்கள் விண்ணப்பத்தை உறுதி செய்துள்ளது. மருத்துவ சான்றிதழ் வாங்கி 20 நாட்களாகி விட்டது. இருந்தும் எங்களை அழைத்து செல்ல அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

மேலும் ”இங்கு வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பலர் தினம்தோறும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர். 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் கரு கலைந்து விட்டது" என்று சொல்லிவிட்டு கண் கலங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர்,"வெளிநாட்டில் உள்ள மக்களை கோடிக் கணக்கில் செலவழித்து விமானம் வைத்து அரசு அழைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளில், ஊடகங்களில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை அனுப்பிக் கொண்டிருப்பதாக தமிழக அரசு சொல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அப்படியிருக்கையில், எங்களை மட்டும் அழைத்து செல்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? ரயில் மூலம் அனுப்புவதில் பல சிக்கல் இருக்கிறது என்றால், பேருந்துகள் மூலம் அழைத்து சென்று இருக்கலாம் தானே...?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர்,"சொந்தம், குழந்தைகள் அழுகையை பொறுக்க முடியாமல் இதில் சிலர் நடந்தே தமிழகம் சென்று விட்டனர். மீதமுள்ள மக்கள் உடல், மன ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. தற்கொலைதான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கூட அரசுகள் நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.பசியை விட ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. செத்தால் கூட பரவாயில்லை அது எங்கள் ஊரில் தான் நிகழ வேண்டும்" என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

பெண்கள் பேசுகையில்,"20 வருடங்களாக இந்த கூலி வேலைக்கு வந்து கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நோய் பரவும் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டோம். ஏற்கனவே பசி, பட்டினியுடன் காட்டிற்குள் வாழ்கிறோம். மழைக்காலம் வேறு துவங்கப் போகிறது. என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை.இப்போது, எங்களை உயிருடன் பார்க்க வேண்டும் என்று எங்கள் குழந்தைகள் அழுகின்றனர். அவர்களின் அழுகை எங்களை தூங்க விடவில்லை" என்று தெரிவித்தவர்கள் "நாங்கள் இப்போது கடவுளை கூட நம்பவில்லை, யார் எங்களை ஊருக்கு அழைத்து செல்கிறார்களோ அவர்களை கடவுளாக வணங்குகிறோம்.எங்களை எப்படியாவது எங்கள் ஊரில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிட்டு அழுதபடி தரையை தொட்டு கும்பிட்டார் ஒருவர்.

இவர்கள் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய உதவி வரும் சமூக ஆர்வலர் வசுமதி கூறுகையில், இந்த மக்கள் அனைவரும் ஊர் திரும்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, மகாராஷ்டிரா அரசு இவர்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு சார்பில் அனுமதி அளிப்பதில் தாமதம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும், ரயில் ஒன்றுக்கு 1400 பேர் மட்டுமே அழைத்து வர முடியும் என்கிற நிலையில், இங்கு இருக்கும் 1700 பேரில் 1400 பேரை அழைத்து வர அனுமதி அளிப்பதாகவும், மீதமுள்ள மக்களை அங்கேயே வைத்துப் பாதுகாக்கும் படி தமிழக அரசு மகாராஷ்டிரா அரசிடம் கேட்டுள்ளதாகாவும் உள்ளதாகவும் தெரிவித்தவர்,தமிழக அரசின் இந்த முடிவை மகாராஷ்டிரா அரசு ஏற்காததால் தான் இவ்வளவு தாமதம் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா அரசுக்கான தமிழக அரசின் சிறப்பு அதிகாரியிடம் பேசி அவர்களை அழைத்து வரும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசுகள் துரிதமாக செயல்பட்டு முடிவெடுத்தால் மட்டுமே அவர்கள் ஊருக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading