முகப்பு /செய்தி /கொரோனா / பாகிஸ்தான் முதல் சவுதி அரேபியா வரை - கொரோனா 2-வது அலையில் சிக்கிய இந்தியாவுக்கு உதவும் 11 நாடுகள்!

பாகிஸ்தான் முதல் சவுதி அரேபியா வரை - கொரோனா 2-வது அலையில் சிக்கிய இந்தியாவுக்கு உதவும் 11 நாடுகள்!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளன.

  • Last Updated :

கொரோனா வைரஸ் 2வது அலை பாதிப்பால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் சாலைகளிலும், ஆக்சிஜனுக்காக தொழிற்சாலைகளின் வாசல்களிலும் காத்துக்கிடக்கின்றனர். மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் பலர் காத்திருக்கும் அதே வேளையில், மயானங்களிலும் எரிப்பதற்கு இடம் இல்லாமல் பிணங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் அவல நிலையும் அரங்கேறி வருகிறது. அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து இந்தியா மீட்க உலக நாடுகளும் முன்வந்துள்ளன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளன.

1. பிரான்ஸ்(France)

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதால், குறிப்பிடத்தகுந்த அளவிலான ஆக்சிஜனைக் கொடுக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன், 8 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களைக் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஜெனரேட்டரும் தன்னிச்சையாக 10 ஆண்டுகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் திறன் உள்ளவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2. ஜெர்மனி ( Germany)

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தேவையான ஆக்சிஜனை வழங்க முடிவெடுத்துள்ளதாக ஜெர்மனி கூறியுள்ளது. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் இதனை தெரிவித்துள்ளார். தேவையைப் பொறுத்து 23 மொபைல் ஆக்சிஜன் ஜெனரேட்டிங் பிளான்ட் அமைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆக்சிஜன் பிளான்ட்டும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனையும், ஒரு மணி நேரத்துக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜனையும் உற்பத்தி செய்யும் திறன் படைத்தது என கூறப்பட்டுள்ளது.

3. ஆஸ்திரேலியா (Australia)

முன்னெச்சரிக்கை கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா 2வது கொரோனா அலையால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்நாடு ஆக்சிஜனுக்காக போராடி வருவதாகவும், அதனை பூர்த்தி செய்யத் தேவையான ஆக்சிஜனை ஆஸ்திரேலியா வழங்கும் எனக் கூறியுள்ளார்.

4. பாகிஸ்தான் (Pakistan)

அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பாதிப்பையடுத்து தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த மக்களுக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர் மற்றும் கவச உடைகள் (PPE), டிஜிட்டில் எக்ஸ் ரே இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. சவாலை எதிர்கொண்டுள்ள இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

5. சவுதி அரேபியா (Saudi Arabia)

80 மெட்டிரிக் டன் திரவ ஆக்சிஜனை சவுதி அரேபியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா பாதித்த மக்கள் ஆக்சிஜன் தடுப்பாட்டால் அவதியுறுவதாக வெளியான செய்திகளையடுத்து, உடனடியாக ஆக்சிஜனை சவுதி அரேபியா அனுப்பியது. இந்த ஆக்சிஜனை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு அதானி நிறுவனமும், லிண்டே நிறுவனமும் ஏற்றுள்ளன.

6. சீனா (China)

மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனையை இந்தியா எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் நட்பு நாடாக கருதப்படும் அமெரிக்கா, வேக்சின் தயாரிப்புக்கான மூலப் பொருட்களை கொடுக்க முதலில் மறுத்தது. இதனையடுத்து, சீனா தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியன் ( Zhao Lijian), இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்வதற்கு தயாராக உள்ளது, இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார். ஏப்ரல் 25 ஆம் தேதி ஹாங்ஹாங் வழியாக 800 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களையும் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

7. சிங்கப்பூர் (Singapore)

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தவுடன் முதல் நாடாக சிங்கப்பூர், ஏப்ரல் 25 ஆம் தேதி 250 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், 500 BiPAPs, மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் 4 கிரையோஜெனிங் ஆக்சிஜன் கன்டெய்னர்களும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

8. இங்கிலாந்து (United Kingdom)

140 வென்டிலேட்டர் மற்றும் 495 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் டெல்லிக்கு இங்கிலாந்து அனுப்பி வைத்தது. அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் பேசும்போது, இங்கிலாந்தின் நட்பு நாடான இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார். தனிப்பட்ட முறையிலும், உலக அளவிலும் தங்களால் இயன்ற ஆதரவை இந்தியாவுக்கு கொடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

9. அமெரிக்கா (United States)

முதலில் இந்தியாவுக்கு வேக்சின் தயாரிப்பு மூலப் பொருட்களை கொடுக்க மறுத்த பைடன் அரசு பின்னர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. 318 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி அந்நாடு அனுப்பி வைத்தது. தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

10.கனடா (Canada)

பாதுகாப்பு கவசங்களான PPEs மற்றும் வென்டிலேட்டர்களை கனடா அனுப்பி வைத்தது. கனடா சுகாதாரத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இந்தியாவில் நிலவும் கொரோனா சூழல் குறித்து அதிகாரிகளுடன் பேசுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். இந்த கடினமான சூழலில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கனடா செய்யும் என்றும், கூடுதல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

11. பூடான் (Bhutan)

பூடான் அரசு இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசும்போது, பூடானில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆக்சிஜன் பிளான்டில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாக கூறினார். ரெமிடிஸ்வர் (Remedisvir) மருந்து தட்டுப்பாடு இல்லை எனக் கூறிய அவர், சன் பார்மாவிடம் இருந்து கூடுதலாக 80,000 மாத்திரைகளை வழங்க கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: CoronaVirus