முகப்பு /செய்தி /Coimbatore / வேலை வாய்ப்பு, புதிய முயற்சிகள், ஏற்றுமதி என அனைத்திலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

வேலை வாய்ப்பு, புதிய முயற்சிகள், ஏற்றுமதி என அனைத்திலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

ஜவுளித்துறையில் முக்கிய இடத்தை  கோவை பெற்றுள்ளது.. பியூஸ் கோயல்

ஜவுளித்துறையில் முக்கிய இடத்தை  கோவை பெற்றுள்ளது.. பியூஸ் கோயல்

சிறு,குறு, நடுத்தர தொழில்துறைகளின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக கோவை நகரம் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இந்திய தர நிர்ணய அமைப்புடன்( பி.ஐ.எஸ்) இணைந்து, அனைத்துவித ஜவுளிப் பொருட்களையும் சோதனையிட 25 கோடியில் செலவில் சிட்ராவில் நவீன பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும் எனவும்  இதன்மூலம் ஜவுளி பொருட்களை சோதனையிட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என மத்திய ஐவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்தார்.

கோவை கொடிசியாவில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின்  சார்பில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியை  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியினை பார்வையிட்டார். பின் அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய  அமைச்சர் பியூஸ் கோயல், கோவை ஜவுளி உற்பத்திக்கு மட்டுமில்லாமல் அது தொடர்பான அனைத்து   உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். ஜவுளித்துறையில் முக்கிய இடத்தை  கோவை பெற்றுள்ளது என கூறிய அவர், சிறு,குறு, நடுத்தர தொழில்துறைகளின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக கோவை நகரம் இருப்பதாக தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு, புதிய முயற்சிகள், ஏற்றுமதிகள் என அனைத்திலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தைகளில் கோவை  ஐவுளி ஆராய்ச்சி மையமான சிட்ரா முக்கிய பங்கு வகிக்கின்றது. கொரோனா காலத்தில் கோவை இந்திய ஐவுளி ஆராய்சி மையம் மூலம் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

அதிக அளவில் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் நாடுகளில் இரண்டாவது நாடாக இருந்து வருகின்றது எனவும் தெரிவித்தார். கோவிட் தொற்றுக்கு பின்பு  இந்திய ஜவுளி தொழில்துறை வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜவுளித்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், நடப்பாண்டும் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்நாட்டு ஜவுளி உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும்,  ஏற்றுமதியை 8 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதன்மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா அமைக்க பல மாநிலங்கள் விண்ணப்பித்துள்ளன எனவும்,  தமிழகத்தில் விருதுநகரில் இந்த பூங்கா அமைக்க விண்ணப்பம் வந்துள்ளது எனக்கூறிய அவர், எங்கெல்லாம் தேவை இருந்து, கட்டமைப்பிற்கு குறைந்த விலையில் நிலம் மற்றும் கட்டுபடியான விலையில் 24 மணி நேர மின்சாரம் கொடுத்து ஆதரவளிக்கும் மாநிலங்களில் பூங்கா அமைப்பதற்காக ஊக்குவிப்பை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சந்தைவாய்ப்புகள், ஏற்றுமதியில் போட்டியிட உதவும் வகையில் ஏற்கெனவே ஐக்கிய அரபு நாடுகள் (யுஏஇ), ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன்  வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் விரைவில்  ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

பீளமேட்டில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் (சிட்ரா) சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் வசதியை பார்வையிட்டதாகவும், நாட்டில் உள்ள அனைத்து இளம் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்களை மத்திய அரசின் மக்கள் மருந்ததங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

சிட்ராவில் உள்ள இயந்திரங்கள் மூலம் தமிழகத்துக்கு தேவையான நாப்கின்களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார். பிஐஎஸ் அமைப்புடன் இணைந்து, அனைத்துவித ஜவுளிப் பொருட்களையும் சோதனையிட 25 கோடியில் சிட்ராவில் நவீன பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும் எனவும்  இதன்மூலம் ஜவுளி பொருட்களை சோதனையிட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனவும் தெரிவித்தார்.

தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான பஞ்சாலைகளை லாபத்தில் இயக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறோம் எனவும் தற்போதைய நிலையில் அவை லாபகரமாக இயங்கவில்லை எனக்கூறிய அவர், தேசிய பஞ்சாலைகழகத்துக்கு சொந்தமான சொத்துகளை தனியாருடன் இணைந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பருத்தி விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்டுவதாக கூறிய அவர், விலை அதிகரித்தால் விவசாயிகளுக்கு லாபம்தான் எனவும் பருத்தி் குறைந்த விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Piyush Goyal