Home /News /coimbatore /

பல்லாங்குழி, பரமபதம் மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்.. கோவையில் இல்லம் தேடி கல்வியில் புது முயற்சி..

பல்லாங்குழி, பரமபதம் மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்.. கோவையில் இல்லம் தேடி கல்வியில் புது முயற்சி..

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி

கோவை சிங்காநல்லூர் அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வகுப்பில் மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் புது முயற்சியில் பாடம் கற்பித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்ய தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கியது. கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம்  தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மிகத் தேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 20 பள்ளி மாணவர்களுக்கு ஒருவர் என இந்த கற்பிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் இப்படி கற்பிக்கும் பணியில் ஈடுபடும் இந்த தன்னார்வல ஆசிரியர்கள் சம்பளத்திற்காக உழைக்காமல் குழந்தைகளை அக்கறையோடு கண்காணித்து அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தெற்கு ஆரம்ப பள்ளியில் மாலை நேரத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் எளிதில் கல்வி கற்கும் வகையில் விளையாட்டாக கல்வி கற்பித்து வருகின்றனர்.

    இந்த விளையாட்டு கல்வியில் பல்லாங்குழி, பரமபதம் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. இதில் பல்லாங்குழி மூலம் விளையாடும் விளையாட்டில் மாணவர்கள் மிகக் கடினமாக கருதும் வாய்ப்பாட்டை எளிதாக புரிந்து கற்றுக் கொள்கின்றனர்.

    இதுகுறித்து அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பர்ணிதா கூறும்போது, " இந்த இல்லம் தேடி கல்வியில் விளையாட்டு மூலம் கல்வி கற்பிக்கின்றனர். புத்தகத்தில் உள்ள பாடங்கள் படிக்க சிரமமாக இருக்கும் சூழலில் இல்லம் தேடி கல்வி கற்கும் ஆசிரியர்கள் எளிமையாக கற்பிக்கிறார்கள். பரமபதம் பல்லாங்குழி நொண்டி போன்ற விளையாட்டுக்கள் மூலம் விளையாடிக் கொண்டே கல்வி கற்கிறோம்.

    குறிப்பாக பல்லாங்குழி விளையாட்டு மூலம் வாய்ப்பாடை எளிமையாக கற்று படித்து விடுகிறோம். விளையாட விளையாட எங்களுக்கு வாய்ப்பாட்டுக்கான பதில் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து படிக்கும் பொழுது அதை மனப்பாடம் செய்கிறோம். அது சிரமமாக உள்ளது. ஆனால் விளையாட்டின் மூலம் புரிந்து படிக்கிறோம். எங்கள் வீட்டு அருகே உள்ளவர்களும் இந்த இல்லம் தேடி கல்வியில் சேர விருப்பம் தெரிவித்து தற்போது புதிதாக சேர்ந்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

    இந்த தன்னார்வல ஆசிரியர்கள் வாய்ப்பாடு மட்டுமல்லாமல் பரமபதம் மூலம் அனைத்து பாடங்களையும் எளிமையாக கற்றுக் கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் விளையாட்டாக படிப்பது மனதில் ஆழமாக பதிகின்றது என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து ஏழாம் வகுப்பு படிக்கும் மாநகராட்சி பள்ளி மாணவி சந்தியா கூறும்போது,”  இல்லம் தேடி கல்வியில் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். இங்கு எங்களுக்கு ஆசிரியர்கள் எளிமையாக படிக்க பாடம் நடத்துகின்றனர். பல்லாங்குழி பரமபதம் மூலமும் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். இதில் பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தும் இடத்தில் கேள்வி அடையாளத்தை வைத்து கேள்வி கேட்டு பதில் உருவாக்குகின்றனர். இப்படி அனைத்து பாடங்களையும் விளையாட்டாக கற்பதால் பாடங்கள் எளிதாக மனதில் பதிகின்றது”  என்றார்.

    இப்படி ஆசிரியர்கள் சம்பளத்திற்காக கல்வி சேவையை புரியாமல் இல்லம் தேடி கல்வியில் சமூக அக்கறையோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும், அதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு புது முயற்சியில் ஈடுபடுவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கிறது.

    இதுகுறித்து தன்னார்வல ஆசிரியர் சுதா கூறும்பொழுது,” கொரோனா காலத்தில் குழந்தைகள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டனர். கல்வியில் பின்தங்கினர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் வந்தது. இதை நான் விரும்பி ஏற்று தற்போது சேவை புரிந்து வருகிறேன். இந்த கல்வி கற்பித்தல் மூலம் பெற்றோரைக் காட்டிலும் குழந்தைகளை கவனிக்க எங்களுக்கு வாய்ப்பு அமைகிறது. ஒவ்வொரு குழந்தைகளையும் தனித்தனியாக கவனிக்கிறோம்.

    இங்கு அதிகபட்சமாக 90 சதவீதம் விளையாட்டின் மூலம் கல்வி கற்பிக்கிறோம். இங்கு 5 மணி முதல் 6 மணி வரை கல்வி கற்க வரும் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் அடுத்த வகுப்புக்கு எப்ப வரும் என்ற புன்னகையுடன் செல்கிறார்கள்.
    மாணவர்கள் வாய்ப்பாடு படிப்பதை மிகவும் கடினமாக எண்ணுகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்லாங்குழி விளையாட்டின் மூலம் வாய்ப்பாடு கற்றுக் கொடுத்தேன். அதேபோல பரமபதம் மூலம் அனைத்து பாடங்களும் கற்க முடிகிறது.மேலும் பரமபதம் மூலம் படிக்க வேண்டிய பாடத்தை கேள்வியாக்கி விளையாட்டாக புரிந்து படிக்க வைக்கிறோம்”  என்றார்.

    Also see...  வாய்க்காலுக்குள் பெண்ணை இழுத்திச்சென்று தவறாக நடக்க முயன்ற இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

    இன்றைய காலகட்டத்தில் பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனியார் பள்ளிகள் சில வியாபார நோக்கில் கல்வி கற்பிக்கும் வேலையில் எந்த லாபமும் இன்றி சமுதாய அக்கறையோடு ஏழை எளிய பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என ஆசிரியர்கள் புது முயற்சியில் கற்பிப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    செய்தியாளர்: ஜெரால்ட், கோவை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Illam Thedi Kalvi

    அடுத்த செய்தி