கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் பாகுபாடு காண்பிக்கபடுவதாக நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது அவரது உடைமைகளையும், பயணிகள் சிலரது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றதாகவும், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தார் எனவும், இதுகுறித்து கேட்டபோது அந்த அதிகாரி குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாகவும் கூறினார்.
மேலும், சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை, வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது எனவும், விமானத்தில் 190 பேர் பயணம் செய்த நிலையில் மற்றவர்கள் பைகளை ஏன் சோதனை செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார். குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்வது கஷ்டமாக உள்ளது, சோதனை செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
நடிகை சனம்ஷெட்டியின் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, வருகிற 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது எனவும், இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான நிலையத்தின் உள்ளே செல்லும்போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது எனவும், குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபடுவதாக தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Sanam, Sanam Shetty