Home /News /coimbatore /

கோவை தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் அறிமுகம்..!

கோவை தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் அறிமுகம்..!

ரோபோடிக் அறுவை சிகிச்சை

ரோபோடிக் அறுவை சிகிச்சை

கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு புது நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த பத்து வருடங்களில் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயல்பாகிவிடும் என மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளனர். 

    கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக  மருத்துவமனையில்  நான்காவது தலைமுறை அறுவை சிகிச்சை ரோபோ- டாவின்சி எக்ஸ் நிறுவப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில்  மருத்துவமனையில் 15 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், இங்கு குடல் அறுவை சிகிச்சை, உடல் குறைப்பு அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை என அனைத்து துறைகளுக்கான அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மருத்துவர் பாலு கூறும் போது, "  ரோபோடிக் சிகிச்சை கடந்த 20 வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் இருந்தாலும், சமீபமாக இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகிறது. தற்போது கோவையில் முதன்முறையாக பிஎஸ்ஜி மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ரோபோவை பயன்படுத்தி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வர்.

    ரோபோ தன்னிச்சையாக செய்யும் அறுவை சிகிச்சை அல்ல. ரோபோடிக் அறுவை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவ நிபுணர் ரோபோவை இயக்கி அறுவை சிகிச்சை மேற்கொள்வார். மற்ற அறுவை சிகிச்சையை விட இதில் இரத்தம் விரையம் ஆகாது.
    ஓபன் சர்ஜரி என்று சொல்லப்படுகிற திறந்த அறுவை சிகிச்சையில் வெளியும் உள்ளும் காயம் ஏற்படுகிறது. இந்த ஓபன் அறுவை சிகிச்சையில் துல்லியம் என்பது கடினமாக உள்ளது.

    அதேபோல லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையில் சிறு துளைகளை ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்தாலும், லேப்ரோஸ்கோபி எல்லா வகையிலும் திரும்பி செயல்பட முடியாது. இரண்டு வகையில் மட்டும் தான் செயல்படும். இதனால் குறுகிய சிக்கலான இடங்களில் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் உள்ளது.

    ஆனால் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை இந்த குறைபாடுகளை சரி செய்கிறது. ரோபோடிக் கருவிகள் 8 mm துளைகள் மூலமாக வயிற்றுக்குள் சென்று, அல்லது நெஞ்சுக்குள் அல்லது இருதயம் அருகே சென்று ஏழு திசைகளிலும் திரும்பி 560 டிகிரி வரைக்கும் சுழன்று இயங்க முடியும்.

    இந்த வளைவு நெளிவுகளால் மிகச் சிரமமான அறுவை சிகிச்சைகள் கூட செய்ய முடியும். அதே போல 3 - டி விஷன் கிடைப்பதால் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணருக்கு அறுவை சிகிச்சை செய்யும் இடத்திலேயே துல்லியமாக காண முடியும். இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சையில் வெட்டி எடுக்க வேண்டிய தசையைத் தவிர மற்ற தசைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் இந்த அறுவை சிகிச்சையில் மிக மிக குறைவாக உள்ளது. 8 எம்.எம் துளையில் 4 அல்லது 5 துளைகள் இட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். வலி குறைவு, இரத்தக் கசிவு இல்லை, விரைவாக நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைவார்.

    பெரிய அறுவை சிகிச்சைக்கு கூட இரண்டு முதல் மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து நோயாளி வீடு திரும்பலாம்.
    பிஎஸ்ஜி மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
    ஓபன் சர்ஜரியில் இருந்து லேப்ரோஸ்கோபி சர்ஜரி வந்து தற்போது ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை வந்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த அறுவை சிகிச்சையால் நோயாளிகளுக்கு பலன் உள்ளது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் அனைவருக்கும் இந்த ரோபாட்டிக் அறுவை சிகிச்சை கிடைக்கும். அந்த நிலைமை தற்போது உருவாகி வருகிறது. இன்னும் பத்து வருடங்களில் ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது இயல்பாகிவிடும்.
    ரோபோடிக் கருவி 24 மணி நேரமும் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. குறைபாடு என்பது இந்த அறுவை சிகிச்சையில் கிடையாது.

    Also see... TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு

    எங்களால் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 15 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 3 வயது குழந்தை முதல் 72 வயது முதியவர் வரை இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். மேலும் மலக்குடல், கிட்னி, புற்றுநோய் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சையின் நன்மை குறித்து நோயாளியிடம் தெரிவிக்கிறோம். அவர்களில் ஏற்றுக்கொள்பவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர் " என தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஜெரால்டு (கோவை)
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Doctors, Hospital, Treatment

    அடுத்த செய்தி