முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை - மேட்டுப்பாளையத்தில் அபூர்வ ராஜ நாகங்கள் படையெடுப்பு.. ஆபத்தான சூழலில் கிராம மக்கள்...

கோவை - மேட்டுப்பாளையத்தில் அபூர்வ ராஜ நாகங்கள் படையெடுப்பு.. ஆபத்தான சூழலில் கிராம மக்கள்...

ராஜ நாகம்

ராஜ நாகம்

Mettupalayam | ஊருக்குள் உலா வரும் அரிய வகை ராஜ நாகங்களால் ஆபத்தான சூழலில் அச்சத்தின் பிடியில் மேட்டுப்பாளையம் மலையடிவார கிராம மக்கள் வாழ்கின்றனர். இந்த நாகங்கள் கடித்தால் மரணம் நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. இதி வனச்சூழல் பாதிப்பால் ஏற்படும் விபரீதம் என உயிரின ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Mettupalayam, India

ஆசியாவில் வாழும் பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜ நாகம்.  18 முதல் 22 அடி நீளம் வரை இருக்கும் ராஜ நாகங்கள் மனிதர்களை தாக்கும் போது தரையில் இருந்து ஆறடி வரை எழும்பி படமெடுக்கும். ஒரு மனிதரை கடித்தால் அதிகபட்சம்  மூன்று  நிமிடங்களுக்குள் கொல்லும் தன்மையும், யானையை கடித்தால் இருபது நிமிடத்தில் கொல்லும் கடுமையான விஷத்தன்மையும் கொண்டது ராஜ நாகங்கள். ராஜ நாகம் மட்டுமே பிற வகை பாம்புகளை கொன்று உண்ணும் வழக்கமுடையது.

மேலும் உலகில் உள்ள பாம்பு இனங்களில் ராஜ நாகம் மட்டுமே பறவையினை போல கூடு கட்டி அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். பிற பாம்புகளை விட விஷத்தன்மை மட்டுமின்றி இதன் பார்வை திறனும் மிக அதிகம். இவை இந்தியா, வியட்நாம், மலேசியா, தென் சீனா போன்ற தெற்கு ஆசிய பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகிறது.

மிக மிக அரிதாகவே மனிதர்களின் கண்களுக்கு தட்டுப்படும் இவ்வகை ராஜ நாகங்கள் தமிழகத்தில் சதுரகிரி மலை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் அடர்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் காணப்படுகின்றன. சீரான சீதோஷின நிலை நிலவும் நீராதாரங்கள் உள்ள பசுமையான இலையுதிர் காடுகளில் வாழும் இவை மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பெரும்பாலும் வரவே வராது.

ஆனால் தற்போது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு, நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி போன்ற மலையடிவார கிராமங்களில் அடிக்கடி இந்த அரிய வகை ராஜ நாகங்கள் தென்படுகின்றன. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் ஊருக்குள் உள்ள ஓடைகள் மற்றும் கால்வாய்களில் சுற்றி வருகின்றன. குறிப்பாக எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும் பாக்கு தோப்புகளில் அடிக்கடி காணப்படுவதால் பாக்கு அறுவடை பாதிப்படைந்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மட்டும் பத்துக்கும் மேற்பட  ராஜ நாகங்கள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தவையாகும். ஊருக்குள் நுழையும் நாகப்பாம்பு, மலைப்பாம்பு என வேறு வகை பாம்புகள் பல பிடிபட்டாலும் இவ்வளவு ராஜ நாகங்கள் இப்பகுதியில் காணப்படுவதும் பிடிபடுவதும் வனத்துறையினரையும் வன உயிரின ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்று  கல்லாறு பகுதியில் ஒரு  ராஜநாகம் பிடிபட்ட நிலையில் மேலும் சில ராஜ நாகங்கள் சுற்றி வருவதாக கூறும் கிராம மக்கள், இதனால் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். கடித்தால் ஒருசில நிமிடங்களில் மரணம் நிச்சயம் என்ற நிலையில், பகல் நேரங்களில் கூட ராஜ நாகங்கள் தென்படுவதால் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Also see... கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர் மாயம்....

மேட்டுப்பாளையத்தில் தென்னை, வாழை, கரும்பு, பாக்கு போன்ற விவசாயமே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ள நிலையில் தங்களது தோட்டங்களில் அன்றாட பணிகளை தொடரவோ, இருள் சூழ்ந்த பின் வெளியில் நடமாடவோ இயலாத சூழலில் சிக்கி தவிக்கின்றனர். மூர்க்கதனமான குணம் கொண்ட ராஜ நாகங்கள் மனிதர்களை கண்டால் விலகி செல்லவே முயலும், தன் உயிருக்கு ஆபத்து என கருதினால் மட்டுமே மனிதர்களை தாக்கும் குணமுடையது என தெரிவிக்கும் சூழலியல் ஆர்வலர்கள், அபூர்வ வகை ராஜ நாகங்களின் வனம் சார்ந்த வாழ்வியல் சூழல் மாசுபட்டு உள்ளதையும், இவற்றின் வாழ்விடம் அழிக்கப்பட்டு காட்டின் இயற்கையான நீராதாரங்கள் பாழ்பட்டு போனதல்தான்  ஊருக்குள் இவற்றின் நடமாட்டம் உறுதிபடுத்துவதாக கூறுகின்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அருகில் உள்ள மலைக்காட்டில் இருந்து இரை தேடியும் இணை தேடியும் ராஜ நாகங்கள் வருகின்றன. இவற்றை கண்டவுடன் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் போது உடனடியாக பாம்பு பிடிக்கும் வல்லுனர்கள் உதவியுடன் அவை பிடிக்கப்பட்டு அடர்ந்த காடுகளுக்குள் விடப்பட்டு வருகின்றன. அதிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகங்களை கண்டால் அவற்றை விரட்டவோ துன்புறுத்தவோ முற்படுவது மிக மிக ஆபத்தானது. வனத்துறைக்கு தகவல் கொடுத்தால் அவற்றை பாதுகாப்பாய் பிடித்து சென்று விடுவோம். ராஜ நாகங்கள் இங்கு அதிகம் வருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்” என்றனர்.

Also see... குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், மேட்டுப்பாளையம் பகுதி கிராம மக்களோ பாம்புகளின் அரசன் என வர்ணிக்கப்படும் ராஜ நாகங்களின் தொடர் வருகையால் நடுக்கத்தின் உச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான காரணத்தை வல்லுனர்களின் உதவியுடன் கண்டறிந்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் : எஸ் யோகேஸ்வரன், மேட்டுபாளையம்

First published:

Tags: Mettupalayam, Snake