தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என
அதிமுக ஆட்சியில் பொய் பிரசாரம் செய்யப்பட்டதாக, மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி
குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் ஆறாவது புத்தக கண்காட்சியினை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் புத்தக கண்காட்சியில் உள்ள அரங்குகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,கோவை புத்தக கண்காட்சியில் வரும் 28 ம் தேதி 5000 மாணவர்கள் திருக்குறள் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் 2.50 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது எனவும்,
10 நாட்களுக்கு கோவை அரசு பள்ளி ,கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியின் நிர்வாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக மின்வாரியத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து விட்டு மின்மிகை மாநிலம் என கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பேசி வந்துள்ளனர் என தெரிவித்த அவர், கடந்த ஆண்டு ரூ.9048 கோடி, இந்த ஆண்டு ரூ.3500 கோடி என இந்த அரசு 12500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு மானியமாக வழங்கியுள்ளது .
மின் கட்டணம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் பா.ஜ.க கர்நாடகாவிலும், குஜராத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? 410 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 1100 ருபாய்க்கு விற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் , ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எதனால் ஆண்டுக்கு ஆண்டு கடன் உயர்ந்தது என்பதை சொல்வார்களா?எனவும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வையும், சிலிண்டர் விலை உயர்வையும் திங்கட் கிழமை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்டிப்பார்களா என கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்தும்
அதிமுக, பாஜக ஆகிய இரு இயக்கங்களும் ஓன்றுதான், சின்னங்கள் மட்டுமே வேறு எனவும் இதை அரசியலுக்காக சொல்லவில்லை, நடவடிக்கையை பார்த்து சொல்வதாகவும் தெரிவித்தார்.
உதய்மின் திட்டத்தில் சேர்ந்தற்கான காரணத்தை அதிமுகவினர் சொல்வார்களா? யார் நிர்பந்தம் காரணமாக உதய் திட்டத்தில் கையெழுத்திட்டு சேர்ந்தார்கள் என்பதை விளக்குவார்களா என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் வேறு வழியின்றி மின்கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் அதுவும் மக்களுக்கு பாதிப்பும் இல்லாத வகையில் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மின் துறை தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது எனவும், மாதம் தோறும் மின்கட்டண கணக்கீடு முறை, வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட பின்பு நடைமுறைபடுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.