பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டங்களில் விஷம் கலந்த உணவு பொடிகளை தூவி 50க்கும் மேற்பட்ட காகங்களை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காகங்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது ஏன் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
ரன் படத்தில் வரும் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சியைப் போல, பொள்ளாச்சியின் உணவகத்தில் காக்கா பிரியாணி தயாரிக்கப்படுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபரின் இந்த காக்கா வேட்டை. பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்பட்டதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஏராளமான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அப்பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான காகங்கள் உயிரிழந்து கிடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்களும் அதிகரித்து வந்தன. இந்நிலையில் இன்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். அங்கு வந்த நாகராஜ் மர்மநபரைப் பார்த்து சத்தம் போட அவர் அங்கிருந்து சாக்குப்பையுடன் தப்பியோடினார்.
அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
பிடிபட்ட நபர் குஜராத்தை சேர்ந்த சூர்யா என்பதும், சிஞ்சுவாடியில் வசித்து வருவதும் தெரியவந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று சர்க்கஸ் நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் சூர்யா. தனது மகனுக்கு வெள்ளை படை நோய் இருப்பதால், அதற்கு மருந்து தயாரிப்பதற்காக விஷம் கலந்த உணவை வீசி காகங்களை கொன்று பிடித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வெண்படை நோய்க்கு காகங்களை வைத்த மருந்து தயாரிக்க முடியாது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. காகங்களின் இறைச்சியை ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து உள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவற்றிற்கு வைக்கப்பட்ட விஷத்தை கால்நடைகள், கோழிகள் மற்றும் மயில்கள் சாப்பிட்டிருந்தால் இறக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிடிபட்ட சூர்யாவிடமிருந்து 20க்கும் மேற்பட்ட காகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore