Home /News /coimbatore /

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு

Coimbatore | கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இரவு 8.40 மணி அளவில்  இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மீது இரவு 8:40 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். அந்த பெட்ரோல் குண்டு பா.ஜ.க அலுவலகம் முன்பு விழுந்தது. நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. பா.ஜ.க அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுதொடர்பான பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே  பெட்ரோல் குண்டு வீசப்படும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

இதேபோல கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமணன் என்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மாருதி செலக்சன் என்ற  துணிக்கடையின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசி விட்டு தப்பி சென்றார். இதில் கடையில் இருந்த துணிகளில் தீ பற்றிய நிலையில் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read:  கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு சம்பவம்

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பாஜகவினர் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது பேட்டியளித்த முன்னாள் மாவட்ட தலைவர் நந்தகுமார், "ஏற்கனவே இது போல பாஜக அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு கடந்த காலங்களில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முறையாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.



மேலும் “பா.ஜ.க தலைவர் நட்டா தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவமானது நடத்தப்பட்டு இருப்பதாகவும், காவல்துறை மெத்தனப் போக்குடன் இல்லாமல் உரிய முறையில் விசாரிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், இந்த விவகாரத்தை காவல்துறை மெத்தன போக்குடன் கையாள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். பின்னர் பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து  ஊர்வலமாக சென்ற பா.ஜ.கவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக  மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு: 

இந்த மறியல் போராட்டம் காரணமாக காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியனும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த மறியல் காரணமாக இரவு நேரத்தில் காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் பதட்டமான சூழல் இருந்தது.

அதனால் ஏராளமான போலீசார் காந்திபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். சாலையின் இரு புறமும் அமர்ந்து கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இரவு 10.45 மணி அளவில் பா.ஜ.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். இரவு நேரத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக   பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை ஒப்பணக்கார வீதியில் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Also see... அரசியல் நமக்கு தேவையில்லை - நடிகர் வடிவேலு

மேலும் பா.ஜ.க அலுவலகம், துணிக்கடைகளில் வீசப்பட்டது பெட்ரோல் குண்டா அல்லது கெரோசின் குண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இரு இடங்களிலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Bomb, Bomb blast, Coimbatore, Crime News, Petrol

அடுத்த செய்தி