ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தென்திருப்பதி திருமலையில் நடந்த நவராத்திரி பிரம்மோற்சவ தேரோட்டம்...

தென்திருப்பதி திருமலையில் நடந்த நவராத்திரி பிரம்மோற்சவ தேரோட்டம்...

தேரோட்டம் தென் திருப்பதி

தேரோட்டம் தென் திருப்பதி

Mettupalayam | தென்திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி நவராத்திரி பிரம்மோற்சவ திருத்தேர் வடம் பிடித்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mettupalayam, India

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  தினசரி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை நடைபெற்றது. அத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் திருவீதி உலா நடைபெற்றது.

  இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தாற் போல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 5 மணிக்கு பூஞ்சோலையில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ மலையப்ப சுவாமி  திருத்தேரில் எழுந்தருளினார்.

  சிறப்பு பூஜைக்கு பின்னர் காலை தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தாரை தப்பட்டை நாதஸ்வர இசை மேள, தாளம் முழங்க வெண்குதிரை தாளத்திற்கு ஏற்றபடி நடனமாடி முன்னே செல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் மாடவீதியில் உலா வந்த காட்சி பக்தர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது.

  Also see... மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்... வைரலாகும் புகைப்படம்

  திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ மலையப்பர் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் பாலித்த வண்ணம்  நான்கு மாட வீதிகளில் திருத்தேரில் உலா வந்த காட்சி காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மாட வீதிகளில் உலா வந்த பின்னர் திருத்தேர் தேர் நிலையை அடைந்தது.

  செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன், மேட்டுபாளையம்

   

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Mettupalayam, Navaratri, Tirupati