கோவையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இது போன்ற உணவு திருவிழாக்களை ஒரு வாரம் வரை நடத்தும் வகையில் வருங்காலங்களில் திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் உணவு திருவிழா இன்று துவங்கியது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன்வெட்டி இந்த உணவு திருவிழாவை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டல் குழுமத்தின் செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன், கதாசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி உணவு திருவிழாவை துவக்கி வைத்தனர். பின்னர் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
சரவணம்பட்டி புரோஜோன் மாலில் நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை 3 நாட்கள் இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது. இதில் 65க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய உணவு வகைகள், துரித வகை உணவுகள், சைவ, அசைவ உணவு வகைகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் என அனைத்தும் ஓரே இடத்தில் உண்டு மகிழும் வகையில் உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவையை தேர்வு செய்து உணவு திருவிழா நடத்துவதற்கு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும் தொழில் துறையின் தலைநகர் கோவை என்ற அளவிற்கு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என தெரிவித்தார்.
மேலும் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த விமான நிலைய விரிவாக்கத்திற்காக 1132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதில் 800 கோடி பணி நிறைவடைந்து இருக்கின்றது எனவும், மீதமுள்ள பணிகள் மூன்று மாதங்களில் நிறைவடைந்து விடும் எனவும் தெரிவித்தார். கல்வி, மருத்துவம், தொழில் என அனைத்திலும் உழைப்பின் மாநகராக கோவை இருந்து வருகின்றது என தெரிவித்த அவர், ஓவ்வொரு தொழில் முதலாளிகளை பொறுத்தவரை கோவையின் வளர்ச்சியை சிந்திக்கின்றனர் எனவும், கரூரிலும் கோவை தொழில் முனைவோர் போல இருக்க வேண்டும் என அறவிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனக்கு கோவை மனம் கவர்ந்த ஊராக மாறி இருக்கின்றது என தெரிவித்த அவர், கோவைக்கு என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்து இருப்பதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், இந்த உணவு திருவிழா 3 நாட்கள் என்பது போதுமானது கிடையாது எனவும், வரும் காலங்களில் ஒரு வார காலம் உணவுதிருவிழா நடைபெறும் அளவிற்கு நியூஸ் 18 நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சி சமூக அக்கறை உணர்வுடன் பணியாற்றும் நிறுவனம் என தெரிவித்த அவர், விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்திகளையும் அங்கீகாரத்தையும் வழங்கும் நிறுவனம் எனவும் தெரிவித்த அவர், இந்த உணவு திருவிழாவிற்கு கோவையை தேர்வு செய்தற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் குழந்தைகள், இளைஞர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த 3 நாள் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வித விதமான உணவு வகைகளை ரசித்து, உண்டு மகிழ்ந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.