ஹோம் /நியூஸ் /Coimbatore /

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

தமிழகத்திலேயே முதல் முறையாக கூண்டு அமைக்கப்பட்டு புலி வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவது கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தான்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் முதல்முறையாக ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 10,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான கூண்டு அமைக்கப்பட்டு புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி இன்று முதல் தொடக்கம்.

  ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி உலந்தி, வால்பாறை மானம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை,அமராவதி என 6 வனச்சரகங்களை கொண்டது. இந்த வனச்சரகத்தில் யானை,புலி சிறுத்தை, மான், காட்டுமாடு மற்றும் அரியவகை பறவைகள் என வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்துள்ளது .

  இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தாயை பிரிந்த புலிக்குட்டி அப்பகுதியில் நடக்கமுடியாமல் தவித்து வந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புலிக்குட்டி இருப்பதை உறுதி செய்யப்பட்டு புலியை கண்காணித்த பொழுது  புலியின் கால் மற்றும் உடலில் முள்ளம்பன்றியின் முற்கள் குத்தப்பட்ட காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புலிக்குட்டியை மீட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன்வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி  புலிக்குட்டியை வால்பாறை ரொட்டிக்கடை அருகே உள்ள மனித வன உயிரின மோதல் தடுப்பு குழு அலுவலகத்திற்கு  கொண்டுவரப்பட்டு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

  புலி வால்பாறை நகர்பகுதிக்கு நடுவே உள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகன இறைச்சல் சத்தங்கள் புலிக்குட்டியின் உடலை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நேரில் சென்று புலிக்குட்டியை பார்த்த தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் அவர்கள் புலிக்குட்டியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டதை அடுத்து வால்பாறை வனச்சரகத்தில் இருந்து மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  கடந்த ஒன்றரை ஆண்டு வரை சிறிய கூண்டில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த புலி தற்பொழுது உடலிலுள்ள காயங்கள் அனைத்தும் குணமான  நிலையில் மிக ஆரோக்கியமான நிலையில் தற்பொழுது புலி 118 கிலோ எடை உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

  பொதுவாக தாயிடம் இருந்து வேட்டை ஆட கற்றுக் கொள்ளும் ஆனால் 8 மாதத்திலேயே தாயை விட்டு புலிக்குட்டி தனியாக பிரிந்ததால் மற்ற புலிகளைப் போல அந்த குட்டிக்கு வேட்டையாட தெரியாது என புலிக்குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சியை மேற்கொண்டனர். 10,000 சதுர அடியில் பல லட்சம் ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான கூண்டு அமைக்கப்பட்டு கூண்டை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிக்குட்டி எளிதில் வேட்டையாட பழகுவதற்காக முதலில் முயல் மற்றும் காட்டுப் பன்றிகளை கூண்டுக்குள் விட்டு புலிக்குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சியை தொடங்கினர்.

  சிறிய அளவில் உள்ள கூண்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு மிக பிரமாண்டமான பெரிய கூண்டில் புலியை விடப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூண்டை சுற்றி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூண்டை சுற்றிலும் 5. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிக்குட்டியை 24 மணி நேரமும்  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழகத்திலேயே முதல் முறையாக கூண்டு அமைக்கப்பட்டு புலி வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவது கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தான் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: சக்திவேல் (பொள்ளாச்சி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Pollachi, Tamil News, Tiger, Valparai Constituency