ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

கோவையில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை பணிகளில்  தேக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோவையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த கூலியை வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் தொடர்ந்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளத்தை ஒப்பந்தார்கள் வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில்  தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள கூலியை வழங்க வேண்டும்,ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர் சங்கத்தினர்,  கூட்டமைப்பை ஏற்படுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளில்  தூய்மை பணிகளில்  தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சிஐடியு, அருந்ததியர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம், ஜனசக்தி லேபர் யூனியன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் ஆகிய தூய்மை பணியாளர் சங்கத்தினர் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை தடுத்தாலோ அல்லது அவர்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறை மூலம் சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.\

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர். ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சேர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also read | பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட காரணம் என்ன ?

வரும் 10-ம் தேதி வரை கோவை மாநகரில் கூட்டம் கூடவோ, போராட்டம் நடத்தவோ அனுமதி இல்லை எனவும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கலைந்து செல்லாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும், தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Cleaning workers, Coimbatore, Kovai, Protest