Home /News /coimbatore /

கோவை விமான நிலையத்தில் விடுக்கப்பட்ட அவசகால எச்சரிக்கை... நடந்தது என்ன?

கோவை விமான நிலையத்தில் விடுக்கப்பட்ட அவசகால எச்சரிக்கை... நடந்தது என்ன?

விமானத்திற்குள்லேயே காத்திருந்த மக்கள்

விமானத்திற்குள்லேயே காத்திருந்த மக்கள்

Coimbatore | பெங்களூரில் இருந்து மாலத்தீவு சென்ற விமானத்தில் அவசரகால அலாரம் ஒலித்ததால் உடனடியாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோவை விமான நிலையத்திலும் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று பிற்பகல் 92 பயணிகளுடன் கோ ஏர் விமானம் மாலத்தீவின் தலைநகர் மாலேவிற்கு சென்று கொண்டு இருந்தது.  விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் புகை வெளியேறியதற்கான எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது.

இதனையடுத்து உடனடியாக கொச்சி விமானநிலையத்தை விமானி தொடர்பு கொண்ட நிலையில், கோ ஏர் நிறுவனத்தின் ஏர் பஸ் ரக  விமானத்தை கோவை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் கோவை விமான நிலையத்திற்கும் இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  கோவை விமான நிலைய வளாகத்தில்  அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக ஓடுதளத்தின் அருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. கோவை விமான நிலையத்தில் விமானம் 12.57 மணிக்கு அவசரமாக தரையிறங்கப்பட்டது. விமானத்தில் புகை கசிவு ஏற்பட்ட பகுதிகளை தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விமானத்திற்குள்ளேயே காத்திருந்த பயணிகள்


இதில் புகை வெளியேறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், தொழில்நுட்ப பிரிவினர் முழுமையான ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். விமானத்தில் தீ பிடித்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் விமானம், வழக்கமான நடைமுறைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தனியார் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிற்பகல் ஒரு மணியில் இருந்து விமானத்திற்கு உள்ளேயே இருப்பதாகவும், தங்களுக்கு தேவையான தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளை கூட விமான நிறுவனம் செய்து கொடுக்கவில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினர். மாலை 5 மணி வரை விமானத்திற்கு உள்ளே அமர வைக்கப்பட்டு இருந்த  பயணிகள் பின்னர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Also see...இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்... இந்த வகை ஹெல்மெட் அணிந்தால் அபராதம்.!

மாற்று விமானம் வந்தவுடன் அதன் மூலம் அனைவரையும் மாலத்தீவு அனுப்பி வைக்க விமான நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளார். கோவை விமான நிலைய வளாகத்தில் அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Airport, Coimbatore

அடுத்த செய்தி