Home /News /coimbatore /

யானைகள் வழித்தடத்தில் விதிமீறல்... மூடப்படும் பழமை வாய்ந்த கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை - பொதுமக்கள் அதிர்ச்சி!

யானைகள் வழித்தடத்தில் விதிமீறல்... மூடப்படும் பழமை வாய்ந்த கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை - பொதுமக்கள் அதிர்ச்சி!

அரசு தோட்டக்கலை பண்ணை

அரசு தோட்டக்கலை பண்ணை

பசுமை மாறா கல்லார் பழப்பண்ணையில் உள்ளது போல் வானுயர்ந்த மரங்களையும் அங்கு விளையும் அரிய வகை கனிகளையும் மூலிகைகளையும் வேறு எங்கும் விளைவிக்கவே இயலாது என்பதே இயற்பியல் உண்மை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mettupalayam | Coimbatore | Coimbatore
  யானைகளில் வழித்தடத்தில் அமைந்துள்ளதால் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை மூடப்படுகிறது.

  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னுமிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப்பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும் மண்வளமும் மிகுத்த இப்பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது இப்பழப்பண்ணை. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இந்த பழ பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷின நிலை நிலவுவதால் உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் உள்ளன.

  மேலும், 300க்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம் பஞ்சு மரங்கள், காணவும் கிடைக்கவும் அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டி கிடக்கின்றன. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைசிறந்த தாவரவியல் ஆர்வலர்கள் வரை இங்கு வந்து சென்றுள்ளனர். இயற்கை எழில் மிகுந்த இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங்கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக்கள் விற்பனை, பழச்சாறு மற்றும் ஜாம் விற்பனை, குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா என பல்வேறு வசதிகள் உள்ளதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தே காணப்படும். மேலும், இந்த பண்ணையில், பண்ணை பராமரிப்பு பணிக்காக உள்ளூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

  ALSO READ | கோவையில் மாணவர்களை தேடிச்செல்கிறது நடமாடும் நூலகம்.. பொதுமக்களும் படிக்கலாம்.. எங்கெல்லாம் செல்கிறது தெரியுமா?

  இந்நிலையில், யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து ஆய்விற்காக கடந்த 10.4.22 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய குழுவினர் கல்லார் வருகை தந்தனர்.

  யானைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ள கல்லார்-ஜக்கனாரி பீட் பகுதியில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் உடன் நேரில் ஆய்வு நடத்திய நீதிபதிகள் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 122 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லார் பழப்பண்ணை மூடப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “கல்லார் பழப்பண்ணை மூடப்படும் என்றும் இதற்கு மாற்றாக சிறுமுகை பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு பழப்பண்ணை அமைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

  ALSO READ | அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல்! யாருக்கு வெற்றி?

  ஆனால் பசுமை மாறா கல்லார் பழப்பண்ணையில் உள்ளது போல் வானுயர்ந்த மரங்களையும் அங்கு விளையும் அரிய வகை கனிகளையும் மூலிகைகளையும் வேறு எங்கும் விளைவிக்கவே இயலாது என்பதே இயற்பியல் உண்மை. கல்லார்  பழப்பண்ணை மூடப்படும் தகவல் உள்ளூரை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும், தாவரவியல் ஆர்வலர்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai High court, Nilgiris, Ooty

  அடுத்த செய்தி