ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... இறந்தவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டிற்கான மூல பொருட்கள் கண்டுபிடிப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... இறந்தவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டிற்கான மூல பொருட்கள் கண்டுபிடிப்பு

உயிரிழந்த ஜமோசா முபின்

உயிரிழந்த ஜமோசா முபின்

ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரிந்த நிலையில், புதிய திருப்பமாக அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக குன்னூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  இந்நிலையில், கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

  இதையும் படிக்க : கோவை கார் சிலிண்டர் வெடிப்பை விபத்தாக மட்டும் பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்

  பின்னர் ஜமேசாவின் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான கார் இதுவரை 9 பேரிடம் கைமாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சந்தேக மரணம், வெடிமருந்து சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

  இந்நிலையில் நேற்றிரவு ஜமேசா வீட்டில் மீண்டும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். விசாரணையில் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களுடன், ஜமேசாவுக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

  இதற்கிடையே, கார் வெடிவிபத்து தொடர்பாக குன்னூர் அடுத்த ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் அந்த நபரின் தொலைபேசி சிக்னல் இருந்ததால், அதுதொடர்பாக நீலகிரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் குன்னூரில் இருந்த நபரை பிடித்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Blast, Coimbatore, Country bomb, Kovai bomb blast, Sylendra Babu