Home /News /coimbatore /

வீட்டு வேலை பார்த்துக்கொண்டே பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சிங்கப்பெண்!

வீட்டு வேலை பார்த்துக்கொண்டே பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சிங்கப்பெண்!

மாசிலாமணி மற்றும் அவரது குடும்பத்தினர்

மாசிலாமணி மற்றும் அவரது குடும்பத்தினர்

முதலில் ஜிம்மிற்கு போக எதிர்ப்பு தெரிவித்த கணவர் கூட இப்போது வீட்டில் அவரை இருக்க விடுவதில்லை எனவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை குனியமுத்தூரில் வீட்டு வேலை செய்து வரும் பெண் ஒருவர், மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார். தற்போது தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு தயாராகி வரும் அவர் ஸ்பான்ஸர்களை எதிர்நோக்கியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. 40 வயதான இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இவர் இரு வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகின்றார். இவரது கணவர் ரமேஷ்  கூலித்தொழில் செய்து வருகிறார்.மாசிலாமணி உடல் பருமனாக இருந்த நிலையில் வேலைபார்க்கும்  வீட்டு உரிமையாளரின் மகள் ஒருவர், உடல் எடையை குறைக்க குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற் பயிற்சிக்கு சேர்த்துவிட்டுள்ளார். அப்போது அவருக்கு அந்த ஜிம் பயிற்சியாளர் சிவக்குமார் பளுதூக்கும் பயிற்சி அளித்துள்ளார். அதனை அவர் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார். மாசிலாமணியுடன் அவரது 17 வயது மகள் தாரணியும் ஜிம்மிற்கு சென்று பளூ தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் தமிழ்நாடு பவர் லிஃப்டிங் சங்கத்தின் மாநில அளவிலான போட்டியில்  63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி மாசிலாமணி  தங்கப் பதக்கம் வென்றார். மாசிலாமணியின்  17 வயது மகள் தாரணியும்  47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி அதே போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

இதையும் வாசிக்க: கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி.. தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்..

ஜிம் பயிற்சியாளர் தனக்கு  நல்ல பயிற்சி அளித்ததால் தான் திருச்சியில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வெல்ல முடிந்ததாக தெரிவித்தார். பொருளாதார வசதி இல்லாததால் புரத சத்து உணவு கூட எடுப்பதில்லை எனவும் வீட்டில் இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு பயிற்சி எடுப்பதாகவும்  கூறினார். முதலில் ஜிம்மிற்கு போக எதிர்ப்பு தெரிவித்த கணவர் கூட இப்போது வீட்டில் அவரை இருக்க விடுவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசு பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாசிலாமணியின் மகள் தாரணியும் தனது தாயை பார்த்து ஈர்க்கப்பட்டு தினமும் பளு தூக்கும் பயிற்சி பெற்று வருகின்றார். டயட் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை இருப்பதை சாப்பிட்டுவிட்டு பளு தூக்குத்  பயிற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் அந்த ஜிம் பயிற்சியாளர் சிவக்குமார், மாசிலாமணிக்கும் அவரது மகள் தாரணிக்கும் இலவசமாக பளுதூக்கும் பயிற்சி அளிக்கிறார். மேலும் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருவரும் தேர்வாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டு வேலை செய்து வருவதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் தாயும் மகளும் சாதிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 5 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மாசிலாமணி அரசு தனக்கு ஏதாவது ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் பளுதூக்கும் போட்டிகளில் இன்னும் அதிகமான வெற்றிகளை எட்ட முடியும் என்கின்றார். எந்த வித புன்புலமும் இல்லாமல் சாதிக்க துடிக்கும் இவர்களுக்கு அரசும் , தன்னார்வலர்களும் உதவ முன் வர வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
Published by:Vijay R
First published:

Tags: Coimbatore, Fitness, Gym

அடுத்த செய்தி