கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்த நான்கு பேரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது நண்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு கணியூர் - மாதப்பூர் சாலையில் அப்துல் ரகுமான் தனது அறை நண்பர்கள் இருவருடன் அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்கார்பியோ காரில் வந்து வடமாநில தொழிலாளர்களை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த 4,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்றனர். இதனையடுத்து அப்துல் ரகுமான் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், ஸ்கார்பியோ காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்,
விசாரணையில் கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் கார் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து கலைச்செல்வனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கலைசெல்வனையும், அவரது கூட்டாளிகளான கணியூர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், கோகுல கிருஷ்ணன், மற்றும் ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கருமத்தம்பட்டி காவல்துறையினர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கலைச்செல்வன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Local News, Tamil News