முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வீட்டின் சுவர்களை இடித்து செல்லும் மக்னா யானை.. கோவை மக்கள் அச்சம்!

வீட்டின் சுவர்களை இடித்து செல்லும் மக்னா யானை.. கோவை மக்கள் அச்சம்!

மக்னா யானை

மக்னா யானை

Coimbatore elephant | யானை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியிலிருந்து கோவை நகர் பகுதிக்குள் வருவது வரைக்கும் பொள்ளாச்சி பகுதி வனத்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டதாக பொதுமக்கள் புகார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தர்மபுரியில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை குனியமுத்தூர், இடையர்பாளையம் என குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வந்து சுவர்களை இடிக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு,6 ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது.

பின்னர் கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து  பாலக்காடு சாலையை கடந்த யானை, நேற்று காலை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்தது.

தென்னை தோப்பு,ஓடை மற்றும் விளை நிலங்கள் வழியாக சென்ற மக்னா யானை காலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை உடைத்து நாசப்படுத்தியது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மக்னா யானை மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளி நகர், பி கே புதூர் வழியாக தற்போது செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள முற்புதரில் தஞ்சம் அடைந்துள்ளது. நேற்று காலை 9 மணியிலிருந்து  செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள  முள்புதர் மண்டிய பள்ளத்தில் நின்று கொண்டிருந்த மக்னா யானை இரவு 7 மணி அளவில் அங்கு இருந்து இடையர்பாளையம் பகுதி எல்லைக்குள் சென்றது.

இன்று சுமார் 10 மணி நேரம் ஒரே பகுதியில் நின்ற யானை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விவசாய நிலத்திற்குள் பின்னர் புகுந்தது. தொடர்ந்து அங்கிருந்த தென்னை , வாழை மரங்களை சாய்த்து சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக உணவு உண்டது.

பின்னர் மீண்டும் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியே வந்தது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் உலா வந்த யானை வழித்தடம் ஏதும் கிடைக்காமல், அந்த பகுதியில் இருந்த சுடுகாட்டு மதில் சுவரை முட்டி மோதி உடைத்தது. பின்னர் மீண்டும் அதன் எதிர்புறத்தில் இருந்த முள் புதர் பாதைக்குள் புகுந்தது.

இந்த நிலையில் வனத்துறையினர் யானை மாநகர் பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியிலும் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் யானையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவசர காலத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல யானை குடியிருப்பு பகுதியில் வரும் பொழுது பட்டாசுகளும் வீசப்படுகிறது.

மேலும் நாளை விடியற்காலை மக்னா யானையை பத்திரமாக பிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட உள்ளன. அதேபோல சிறப்பு மருத்துவர் குழுக்களும் கோவை நோக்கி வர உள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயத்தில் யானை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியிலிருந்து கோவை நகர் பகுதிக்குள் வருவது வரைக்கும் பொள்ளாச்சி பகுதி வனத்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டனர் எனவும் இது தற்போது நகர் பகுதிக்குள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் வன உயிர் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.

First published:

Tags: Coimbatore, Elephant, Local News