கோவையை சேர்ந்த பெண் ஒருவர் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளார்.
கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் - ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவித்யா தனக்கு முதல் குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து தனது கணவர் பைரவிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர்.
பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஏழு மாதங்களில் ஸ்ரீவித்யா 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்துள்ளார். குறிப்பாக ஸ்ரீவித்யா கொடுக்கும் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் சேர்க்கப்பட்டு அங்கு எடை குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஸ்ரீவித்யா தாய்ப்பால் கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் சிரமப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் தினமும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில், குறிப்பிட்ட குழந்தைகள் எடை குறைவாக இருப்பதால் இன்ங்குபேட்டரில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதை அறிந்து தனது கணவரிடம் கூறியதாகவும், அவருடைய முழு ஒத்துழைப்பு காரணமாக தற்போது தாய்ப்பால் தானம் செய்து வருவதாக தெரிவித்தார்.
கணவர் மட்டுமின்றி தாய், தந்தையும் முழுமையான ஆதரவு கொடுப்பதால் தனது பணியை சிறப்பாக செய்வதாக தெரிவிக்கிறார். மேலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், தாய்பால் தானம் கொடுப்பதாலும் பெண்களின் அழகில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று கூறும் ஸ்ரீவித்யா தாய்ப்பால் கொடுப்பது அக்ஷயம் பாத்திரம் போல பால் கொடுக்க கொடுக்க அதிகளவு சுரக்கும் எனவும் தெரிவித்தார். சமீப காலமாக இதுகுறித்தான விழிப்புணர்வு இளம் பெண்கள் மத்தியிலும் ஏற்படுவதால், தாய்ப்பால் தானம் செய்ய முன் வருவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முன் வர வேண்டும், அதேபோல் இம்மாதிரியான சமூகப் பணிக்கு தன் ஆர்வலர்களும் வரவேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர்: சுரேஷ், கோவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast milk, Coimbatore, Local News