கோவையில் ஒரே நாளில் தடாகம் மற்றும் ஆனைக்கட்டி பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. இந்நிலையில் தடாகம் அடுத்த மாங்கரை வனச் சோதனை சாவடி அருகே வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை இன்று அதிகாலை 3 மணி அளவில் இராமச்சந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை அடுத்து அங்கு வசித்து வரும் அவரது மருமகன் மகேஷ் குமார் யானையை தோட்டத்தில் இருந்து விரட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது திடீரென அந்த ஒற்றை காட்டு யானை மகேஷ் குமாரை தாக்கியது. தொடர்ந்து அவரை காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யானை மகேஷ் குமாரின் உடல் அருகில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி மகேஷ் குமாரின் உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதேபோல ஆனைகட்டி அடுத்த தூவைபதி கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மருதாசலம் என்பவரை ஒற்றை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மருதாச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் தடாகம் மற்றும் ஆனைகட்டி பகுதியில் யானை தாக்கிய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளது ஒரே யானையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் போது கவனமாக வர வேண்டும், யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தடாகம் மற்றும் ஆனைகட்டி பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Death, Elephant, Local News