Home /News /coimbatore /

விபத்தில் 2 கைகளையும், கால்களையும் இழந்த இளைஞர்.. உதவிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்...

விபத்தில் 2 கைகளையும், கால்களையும் இழந்த இளைஞர்.. உதவிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்...

இரண்டு கைகளையும், கால்களையும்  இழந்த சுபாஷ்

இரண்டு கைகளையும், கால்களையும்  இழந்த சுபாஷ்

தமிழகத்தில்  முதல் முறையாக விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்த தொழிலாளிக்கு கோவை அரசு மருத்துவமனையில்  செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டது. உடல் உறுப்புக்களை இழந்ததால் விரக்தியில் இருந்த இளைஞருக்கு  நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதுடன் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக மாவட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதியளித்து இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வேப்பம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான சுபாஷ். கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மின்சார விபத்தில் சுபாஷ் இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும்  இழந்தார். இவரை வைத்துக்கொண்டு கட்டிட வேலைக்கு செல்லும் பெற்றோர் கஷ்டப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் செயல்பட முடியாமல்  வீட்டிலிருந்த சுபாஷ் கடுமையான பொருளாதார சூழலில் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து முறையிட்டார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விமலாவை தொடர்பு கொண்டு தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த செயற்கை கை, கால்களை பொறுத்த உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சுபாஷிற்கு எடை குறைந்த செயற்கை கை மற்றும் கால்கள் பொருத்தப்பட்டதுடன், அவருக்கு மனப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்றவையும் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டது.

.இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்தவருக்கு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கைகள், கால்கள் பொருத்தப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும். தனியாரிடம் இவற்றை பொருத்துவதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக இளைஞர் சுபாஷுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சுபாஷ் தன் வேலைகளை தானாகவே செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டதால் தன்னால் எளிதாக தற்போது நடக்க முடிவதாகவும் கை,கால் இழந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தற்கொலை எண்ணங்களும் வந்து சென்றதாகவும் தெரிவித்தார். இப்போது தன்னால் நடக்க முடிவதுடன் 80 சதவீத வேலைகளை செய்து கொள்ள முடிவதாகவும் மாவட்ட ஆட்சியர் வாய்ப்பு வரும் போது உரிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதாக தெரிவித்து இருப்பதாகவும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் கட்டிட தொழிலாளி சுபாஷ் தெரிவித்தார்.

இரு கை, கால்களை இழந்த சுபாஷிற்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு  முதலில் மன பயிற்சியும், அதன் பின் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தெரிவத்தார். ஓரே நபருக்கு இரு கை, கால் இழந்தவருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பது முதல் முறை எனவும் தெரிவித்த அவர், மருத்துவர்கள் குழுக்களாக இணைந்து அவருக்கு பயிற்சி அளித்ததாகவும், அவருடைய தன்னம்பிக்கை அதிகரித்து எடை குறைந்த செயற்கை கை, கால் பொருத்தப்பட்டதால் அவரால் அவரது பணிகளை செய்ய முடிவதாகவும் மருத்துவர் வெற்றிவேல் செழியன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சுபாஷ் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து செயற்கை கை மற்றும் கால்கள் பொருத்த உதவியதற்கு நன்றியை தெரிவித்து கொண்டார். மாவட்ட ஆட்சியருக்கு கைகளை குலுக்கியும், செயற்கை கால்கள் மூலம் நடந்துகாட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசின் மூலமாகவோ அல்லது தனியார் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Also see... சன்யாச படையை உருவாக்குவேன் - நித்யானந்தா சபதம்

இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் இழந்து வாழ்வில் விரக்தியடைந்த  இளைஞருக்கு மாவட்ட நிர்வாகம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஜெராலட், கோவை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, District collectors, Hands, Legs

அடுத்த செய்தி