ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோயில் அருகே.. தீபாவளி முதல்நாள்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பை விபத்தாக மட்டும் பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்

கோயில் அருகே.. தீபாவளி முதல்நாள்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பை விபத்தாக மட்டும் பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Car Cylinder Explosion in Coimbatore | 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முன்னாள் துணை பிரதமர் அத்வானியை கொல்வதற்காக கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை விபத்தாக மட்டும் பார்க்க கூடாது. அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என கோவை தெற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை டவுன் ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே இன்று அதிகாலை 4.10 மணியளவில் வந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது.

  காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன. கோவையில் தீபாவளிக்கு முதல் நாள். அதுவும் கோவில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழக அரசும், காவல்துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது. கோவை மாநகரம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

  இதையும் படிங்க : கோவை கார் விபத்து : 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை- டிஜிபி தகவல்!

  1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முன்னாள் துணை பிரதமர் அத்வானியை கொல்வதற்காக கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அது தமிழகத்தின் இருண்ட வரலாறு. சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கோவையில் வலுவாக இருந்து வந்துள்ளது.

  எனவே கோவையில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் அது ஏதாவது பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதனை ஒரு விபத்து என்ற கோணத்தில் மட்டும் போலீசார் அணுகிவிடக்கூடாது. ஏனெனில் இனியொரு பயங்கரவாத சம்பவத்தை தாங்கும் சக்தி கோவைக்கும், தமிழகத்திற்கு கிடையாது.

  இதையும் படிங்க : கோவை தங்கநகை பட்டறையில் 1 கிலோ தங்க நகைககளை திருடிய ஊழியர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

  எனவே அது பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Bomb blast, Coimbatore