தமிழகத்தை பாலைவனமாக்கும் கனிம வள கொள்ளை கடத்தலை தமிழக அரசு 20 நாட்களில் தடுக்காவிட்டால் 21 வது நாளில் அனைத்து சோதனை சாவடிகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, ஆனைமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகள் மூலம் கனிம வளங்களை அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படும் சம்பவங்களை கண்டித்து பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படும் சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேரளாவில் ஆற்றுப்படுகையில் மண் எடுத்தால் குண்டர் சட்டம் பாய்கிறது, கல்குவாரிகளில் பாறைகள் உடைக்க அனுமதி வழங்குவதில்லை வருங்கால சந்ததிகளை கேரளா அரசு காப்பாற்ற நினைக்கிறார்கள். மாறாக தமிழக பகுதிகளிலிருந்து மாஃபியா கும்பல் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. மேலும் கோழி கழிவுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகின்றனர் இதையெல்லாம் தடுத்து நிறுத்த தமிழக அரசு மறுக்கிறது என பேசினார்.
கேரளாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தமிழக முதல்வர் உறவு வைத்துக் கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தனக்கு துணை பிரதமர் பதவி கிடைக்கும் என்ற நட்பாசையில் தமிழகத்தின் கனிம வளங்களை கேரளாவுக்கு தாரைவார்த்து வரும் செயலில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டிய அண்ணாமலைஅரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. இதில் கனிம வளம் மூலம் வெறும் 900 கோடி வருவாய் வருவதாக அரசு கணக்கு காட்டப்படுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார். 3 யூனிட் 4 யூனிட் செல்ல வேண்டிய லாரிகளில் 12 யூனிட் வரை கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் பழுது அடைந்து வருகிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் கனிம வள கொள்ளைகளை 20 தினங்களில் தடுத்து நிறுத்தாவிட்டால் 21 வது நாள் அனைத்து சோதனை சாவடிகளை முற்றுகையிட்டு கனிம வளங்களை கடத்தும் லாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்..
செய்தியாளர்: ம.சக்திவேல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, BJP's state president