ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பங்களாதேஷ் டூ திருப்பூர்.. போலி முகவரியில் கோவை வந்த டெய்லர்.. விமான நிலையத்தில் சிக்க வைத்த தேசிய கீதம்!

பங்களாதேஷ் டூ திருப்பூர்.. போலி முகவரியில் கோவை வந்த டெய்லர்.. விமான நிலையத்தில் சிக்க வைத்த தேசிய கீதம்!

கோவை

கோவை

Coimabtore | தான் கொல்கத்தாவில்தான் வசிக்கிறேன் என திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்த நபரை சோதனை செய்ததில் போலி ஆவணங்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

தமிழகத்தில் 3 ஆண்டுகள் டெய்லராக பணிபுரிந்த பங்களாதேஷ் நாட்டுக்காரர் போலீசிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையத்திற்கு திங்கள் கிழமை காலை சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. இதில் வந்த பயனிகளை வழக்கமான பரிசோதனைக்கு இமிகிரேஷன் அதிகாரிகள் உட்படுத்தினர். அப்போது கொல்கத்தா முகவரியுடன் கூடிய பாஸ்போர்ட்டில் வந்த அன்வர் உசேன் என்பவர் மீது விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தான் கொல்கத்தாவில்தான் வசிக்கிறேன் என திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்துள்ளார் அன்வர்.

அவரது ஆவணங்களை சோதனை செய்தபோது போலியான ஆவணங்கள் என்பதை கண்டுபிடித்து உறுதி செய்தனர் அதிகாரிகள். உடனே அன்வரிடம் வந்து இந்தியாவின் தேசிய கீதத்தை பாடச் சொல்லியுள்ளனர் இமிகிரேஷன் அதிகாரிகள். முழுவதும் பாடத் தேவையில்லை முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடினால் கூட போதும் என்று அதிகாரிகள் கூற, வசமாக சிக்கிக் கொண்டார் அன்வர்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 2018 முதல் 2020ம் ஆண்டு வரை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார் அன்வர். பின்னர் பெங்களுரில் உள்ள ஏஜென்ஸி முலம் போலியான ஆதார் கார்டை தயாரித்து கொல்கத்தா முகவரியை காட்டி அங்கு பாஸ்போர்ட் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பாஸ்போர்டை பயன்படுத்தி அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றும் டெய்லர் வேலை பார்த்த நிலையில் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவருக்கு ஊதியம் கிடைத்துள்ளது. திருப்பூரிலும் இதே ஊதியமே கிடைத்ததால் , எதற்கு அரபு நாட்டில் கஷ்டப்பட வேண்டும் என நினைத்து மீண்டும் திருப்பூருக்கு திரும்ப திட்டமிட்ட அன்வர் உசேன் ஏர்அரேபியா மூலம் கோவை வந்துள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் கொல்கத்தா விமானநிலையம் செல்லாமல் கோவை விமான நிலையம் வந்ததால் சந்தேகம் அடைந்த இமிகிரேசன் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அன்வர் உசேன் சிக்கி கொண்டார். இதனையடுத்து கோவை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரி கிருஷ்ணன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News