சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா(25). இவர் தனது நண்பர்களான பாலாஜி(20), அஜய்(19), விவேக்(19), நிஜாமுதீன்(20) ஆகியோருடன் சேர்ந்து பாலவாக்கம் அண்ணாசாலை ராம் கார்டன் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்த 5 பேரில் ராகவேந்திராவிற்கு மட்டும் வயது 25, மற்ற நபர்கள் 19, 20 வயதுடையவர்கள்.
இந்நிலையில், மதுபோதையில் இருந்தவர்கள் ராகவேந்திராவை மரியாதை குறைவாக பேசியுள்ளனர். ஆத்திரத்தில் பாலாஜி, விவேக் இருவரையும் ராகவேந்திரா முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் பாலாஜி, விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து திருப்பி தாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து ராகவேந்திரா தப்பி அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற 4 பேரில் பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராகவேந்திராவை சரமாரி வெட்டியுள்ளார்.இதனால் ராகவேந்திரா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடிவந்தனர்.
இதனை கண்டு பாலாஜி, விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நீலாங்கரை போலீசருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல வெட்டு காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்த ராகவேந்திராவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ராகவேந்திராவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு அதே மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவலை வைத்து ராகவேந்திராவை வெட்டிய பாலாஜி. விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய 4 பேரையும் துரிதமாக விரைந்து செயல்பட்டு கைது செய்தனர்.
பின்னர் 4 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவான்மியூர் குப்பம் பீச் சாலையை சேர்ந்த பாலாஜி மீது திருவான்மியூரில் ஒரு அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளதும், அதே பகுதி சேர்ந்த அஜய் மீது நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் இரண்டு நிலுவையில் உள்ளதும், ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார் இந்த கொலை சம்பவம் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நடந்ததா? அல்லது திட்டம் தீட்டி மது அருந்துவதுபோல் நாடகமாடி வரவைத்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வினோத்கண்ணன் - இசிஆர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News