முகப்பு /செய்தி /சென்னை / உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய ரவுடி... துப்பாக்கியால் அதிரடியாக சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ..!

உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய ரவுடி... துப்பாக்கியால் அதிரடியாக சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ..!

ரவுடி சூர்யா

ரவுடி சூர்யா

வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பெண்டு சூர்யா, அங்கிருந்த கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில்,  இருசக்கர வாகனத்தை கௌதம் என்பவர் இயக்கி வந்ததும் அவர் பின்னால்  அமர்ந்து வந்தது சூர்யா என்கிற பெண்டு சூர்யா மற்றும் அஜித் ஆகியோர் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் வந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்தனர். பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக போலீசார் தீவிர  தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா  வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் திருவள்ளுவர் மாவட்டம் விரைந்து பென்டு சூர்யாவை கைது செய்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்பொழுது பெண்டு சூர்யா தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார். வாகனத்தை ஓரமாக நிறுத்தியபோது அங்கிருந்து பெண்டு சூரியா தப்பி ஓடியுள்ளார். அவரை உடனே தலைமை காவலர் அமுனுதீன் மற்றும் காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு  துரத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு இருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.  அதில், தலைமை காவலர் அமானுதீன் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பேண்டு சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டு அவரை பிடித்தார். பிடிபட்ட பெண்டு சூர்யாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் இதில் பெரும்பாலான வழக்குகள் போலீசாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி பதிவு செய்யப்பட்டது எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai Police, Gun shot, Police