ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை மக்களுக்கு ஷாக்... உயர்கிறது குடிநீர் கட்டணம்.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா? விவரம்!

சென்னை மக்களுக்கு ஷாக்... உயர்கிறது குடிநீர் கட்டணம்.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா? விவரம்!

சென்னை குடிநீர்

சென்னை குடிநீர்

சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக மாதந்தோறும் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் சார்பில் குழாய் மற்றும் லாரிகள் மூலம் நாள்தோறும் சுமார் 100 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுபோலவே சென்னையில் ஒரு கோடி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. கடந்த 2019 -20 ஆம் ஆண்டு வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் என குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் இதே சதவிகிதத்திற்கு கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயத்தப்படவில்லை. இதனால் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2023 - 24ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் என குடிநீர் கட்டணம் உயர்த்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வானது ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக மாதந்தோறும் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வு அமலுக்குப் பிறகு இது ரூ.84 ஆக வசூலிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு 250 ரூபாயாக இருந்த கட்டணம் 263 ரூபாயாக உயர்கிறது. இதேபோல வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் லாரி குடிநீரைப் பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் 475 ரூபாயில் இருந்து 499 ரூபாயாகவும், 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் 700 இல் இருந்து 735 ரூபாயாகவும் உயர்கிறது.

வணிக நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் 6 ஆயிரம் லிட்டர் குடிநீர் 700 ரூபாயில் இருந்து 770 ரூபாயாகவும், 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் 1,000 ரூபாயில் இருந்து 1,100 ரூபாயாகவும் உயர்கிறது. வீடுகளுக்கு மீட்டர் அடிப்படையில் கணக்கிடப்படும் கட்டணம் 10 ஆயிரம் லிட்டர் வரை 40 ரூபாயாக இருந்தது. தற்போது 42 ஆக உயர்த்தப்படவுள்ளது.

கூடுதல் செலவீனங்களை கருத்தில் கொண்டு கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.

First published:

Tags: Chennai corporation, Water