சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உற்ற தோழி வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் அராஜக செயல்கள் சர்வசாதாரணமாக மாறியுள்ள நிலையில், இந்த ஆட்சியின் அவலநிலையை நீக்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி அமைப்பதே ஒரே தீர்வு என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில், தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் என்பவர், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், அரிவாளால் ஒருவரை வெட்ட, ஓடி ஓடி விரட்டிய சம்பவம், நேற்று சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்க முடிந்தது.
அதேபோன்று, பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வந்து, தீர்த்தகிரி நகர் பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதற்கு என்ன காரணம் என விசாரித்த பெண் மீது, மின்வாரிய ஊழியர் மின்மீட்டரை தூக்கி அடித்து தாக்கும் சம்பவம் நடந்துள்ளது, திராவிட மாடல் ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டு, தி.மு.க.வினர் நடத்தும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள்தான் இவை.
இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதால், திராவிடர்களாகிய நம் அனைவருக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற அவல நிலைகளை, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் யாரும் பார்க்க முடிந்ததா? - யாரும் இதுபோல் செய்ய துணிவார்களா? - இப்போது ஏன் சர்வ சாதாரணமாக அராஜக செயல்கள் நடக்கின்றன? - திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் இவ்வாறு செயல்படுகிறார்களோ என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்.. ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்: தொல்.திருமாவளவன்
தி.மு.க.வினரின் ஆட்சியில் இதுபோன்ற அவலங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது கவலையை அளிக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? இதற்கெல்லாம் ஒரே தீர்வு, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சியை விரைவில் அமைத்து, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திடுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Dravidam, VK Sasikala