சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருதரப்பு தொண்டர்கள் மோதிக் கொண்டதில், 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பணத்தை வாங்கிக் கொண்டு மாவட்ட புதிய நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மூத்த நிர்வாகிகள் கூட்டம் முடிந்தபின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தாமல் காரில் புறப்பட முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள் காரை முற்றுகையிட்டனர்.
பிரியா மரணத்துக்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம்- சீமான் கண்டனம் (news18.com)
அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. உருட்டுக்கட்டைகளை கொண்டு இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி. 3 பேருக்கு காயம்.@News18TamilNadu pic.twitter.com/vrZLfbAqlr
— Tamilarasi Dhandapani (@i_tamilarasi) November 15, 2022
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், கூட்டத்தை விலக்க முற்பட்ட போது, காங்கிரஸ் தொண்டர்கள் இருவரின் கன்னத்தில், கே.எஸ்.அழகிரி அறைந்தார். தொண்டர்களை அழகிரி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என கூறி திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனின் உருவ பொம்மையை, காங்கிரஸ் கட்சியினரே எரிக்க முயன்றனர். நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அரசு பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் மட்டுமே இயக்கப்படுவது குறித்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறி, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இணைந்து போராட்டம் நடத்தினர். அப்போது, எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress party, KS Alagiri