சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரிழந்தவரின் உடல், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்துள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(45). மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் தனது பிள்ளைகளின் படிப்புக்காக ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த ஐந்து ஆண்டுகள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்துள்ளார். சரியாக 2:30 மணிக்கு, தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 95% தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் 12 ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த மலைக்குறவர் வேல்முருகனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் கடந்த 12ம் தேதி காலை முதல் கே.எம்.சி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக உயிர் இழந்த வேல்முருகனின் மனைவி சித்ராவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும்.
ஜாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மேலும், நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வேல்முருகனின் மனைவி சித்ரா, வேல்முருகனின் தந்தை கலியமூர்த்தி உள்ளிட்ட உறவினர்கள் 150 க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் DRO சிவ ருத்ரய்யா கே.எம்.சி மருத்துவமனை வந்து ஜாதி சான்றிதழ் வழங்குவதாகவும் கோரிக்கைகளை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், உறவினர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடலை வாங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், டி.ஆர்.ஓ. சிவ ருத்ரய்யா எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க இயலாது என கூறியதால் போராட்டம் வலுவடைந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பதற்றம் அதிகரிக்க, பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி மற்றும் ஐந்து காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து, உயிரிழந்த வேல்முருகனின் உடலை வாங்குவதாக அவரின் முதல் மனைவி வெண்ணிலா சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்த வேல்முருகனின் உடல் அவரது முதல் மனைவியான வெண்ணிலாவிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் வேல்முருகனின் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து சேர்மாதூர் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டதுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Chennai Police